திருமுறைக்குக் கிடைத்த மகுடம்! பத்மஸ்ரீ விருது பெற்ற ஓதுவார் சுவாமிநாதன்: நெகிழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம்!
திருத்தணி சுவாமிநாதனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதற்கு , தருமபுரம் ஆதீன மடாதிபதி நெகிழ்ச்சியுடன் வாழ்த்துச் செய்தியினை வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை: நாட்டின் மிக உயரிய உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் 'பத்ம' விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகத் தமிழறிஞரும், தருமபுரம் ஆதீனத் தேவாரப் பாடசாலையின் தலைமை ஆசிரியருமான திருமுறை கலாநிதி திருத்தணி சுவாமிநாதனுக்கு 'பத்மஸ்ரீ' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமுறைச் சேவையை அங்கீகரிக்கும் வகையில் ஒரு ஓதுவாருக்கு இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பதால் தமிழகம் முழுவதும் ஆன்மீகத் தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரம் மண்ணில் விளைந்த தமிழ்க் கலை
மயிலாடுதுறை மாவட்டம், பழமை வாய்ந்த சைவத் திருமடமான தருமபுரம் ஆதீனத்தின் தேவாரப் பாடசாலையில் மாணவராகப் பயின்றவர் திருத்தணி சுவாமிநாதன். இளவயது முதலே சைவத் திருமுறைகளின் மீது கொண்ட பற்றுதல் காரணமாக, பண்ணிசையோடு தேவாரப் பாடல்களைப் பாடுவதில் வல்லமை பெற்றார். தனது குரலால் இறைப்பணியையும், தமிழ்ப்பணியையும் ஒருசேரச் செய்து வரும் இவர், தற்போது தான் பயின்ற அதே தருமபுரம் ஆதீன தேவாரப் பாடசாலையில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது திருமுறைத் தொண்டினைப் பாராட்டி, தருமபுரம் ஆதீனம் ஏற்கனவே இவருக்கு 'திருமுறை கலாநிதி' என்ற உயரிய பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசுக்குத் தருமபுரம் ஆதீனம் பாராட்டு
திருத்தணி சுவாமிநாதனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு, தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நெகிழ்ச்சியுடன் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
"தருமபுர ஆதீனத் தேவாரப் பாடசாலையின் தலைமை ஆசிரியரும், எமது பாடசாலையின் முன்னாள் மாணவருமான திருமுறை கலாநிதி ஓதுவார் சுவாமிநாதனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது அவருக்குக் கிடைத்த விருது என்பதைத் தாண்டி, தமிழுக்கும் திருமுறைக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.
பன்னெடுங்காலமாகத் தனது வாழ்நாளைத் திருமுறை ஓதுவதிலேயே கழித்து வரும் ஒருவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. முதன் முறையாகத் திருமுறைக்கு இத்தகைய பெருமை சேர்த்த மத்திய அரசுக்கு எமது ஆசிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஓதுவார் சுவாமிநாதனின் தொண்டு உலகெங்கும் பரவச் செந்தமிழ் சொக்கநாதன் திருவருளையும், தருமபுர ஆதீன குரு மணிகளின் குருவருளையும் பிரார்த்திக்கின்றோம்" என்றார்.
சைவப் பெருமக்களின் கொண்டாட்டம்
தமிழகத்தில் பக்தி இலக்கியங்கள் மற்றும் பண்ணிசைப் பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாப்பதில் ஓதுவார்களின் பங்கு அளப்பரியது. ஆனால், தேசிய அளவில் இத்தகைய கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது அரிதாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், ஒரு மூத்த ஓதுவாருக்குப் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பது, அழிந்து வரும் பண்ணிசைக் கலைக்கு ஒரு புதிய உயிர்ச்சக்தியை அளித்துள்ளதாகத் தமிழ் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
திருத்தணி சுவாமிநாதன் அவர்கள் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்குத் தேவாரப் பாடல்களைக் கற்பித்து, அடுத்த தலைமுறைக்கும் இந்தத் தொண்டு சென்று சேரக் காரணமாக இருந்துள்ளார். விருது அறிவிப்பு வெளியானவுடன், மயிலாடுதுறை மற்றும் தருமபுர ஆதீனப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் சீடர்கள் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடி வருகின்றனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பு, தமிழகத்தின் பாரம்பரிய இசைக்கும், சைவ சமயத் தொண்டுக்கும் வழங்கப்பட்ட மிகப்பெரிய மரியாதையாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் ஆன்மீகச் செழுமையையும், செம்மொழித் தமிழின் இசை வடிவமான தேவாரத்தையும் டெல்லி மேடையில் ஒலிக்கச் செய்த பெருமை இவரைச் சாரும் எனப்பலரும் பாராட்டி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























