ஜீவனாம்சம் கேட்ட மனைவி.. மகனுடன் சேர்ந்து வெட்டிக்கொன்ற கணவன் - நீதிபதி கொடுத்த அதிரடி தீர்ப்பு
மயிலாடுதுறையில் ஜீவனாம்சம் கேட்ட மனைவியை தந்தை, மகன் சேர்ந்து கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மயிலாடுதுறையில் இரண்டாவது மனைவியின் மகனுடன் சேர்ந்து முதல் மனைவியை வெட்டி கொலை செய்த வழக்கில் இரண்டாவது மனைவியின் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்த கணவர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட கொத்த தெருவை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் 66 வயதான தீனதயாளன். இவரது மனைவி 65 வயதான மீனாட்சி. இவர்களுக்கு ராஜரத்தினம் என்ற மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் மேற்படி தீனதயாளன் என்பவருக்கு, மாரியம்மாள் என்ற மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுக்கு செந்தில்குமார் என்ற மகன் பிறந்துள்ளார்.
ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
இதனால் ஆத்திரமடைந்த மீனாட்சி தனது கணவரின் நடத்தை காரணமாக தீனதயாளனை விட்டு பிரிந்து சென்று தனது மகன் ராஜரத்தினத்துடன் நல்லாடை பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் மீனாட்சி தனது வாழ்வாதாரத்திற்காக தனது கணவர் தீனதயாளனிடம் ஜீவனாம்சம் வழங்கிட கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் மீனாட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டு மீனாட்சிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.
கொலை செய்த தந்தை, மகன்
அதனைத் தொடர்ந்து கடந்த 25.02.2017-ம் தேதி மீனாட்சி கணவர் தீனதயாளன் வீட்டிற்கு ஜீவனாம்சம் கேட்க சென்றுள்ளார். அப்போது அவரது கணவர் தீனதயாளன் மற்றும் தீனதயாளனின் இரண்டாவது மனைவியின் மகன் செந்தில்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து மீனாட்சியை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதனை அறிந்த மீனாட்சியின் மகன் நாகரத்தினம் இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொலை குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் குற்றவாளிகளான தீனதயாளன் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
முதல் குற்றவாளி உயிரிழப்பு
இவ்வழக்கின் அப்போதைய விசாரணை அதிகாரியான மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் அழகேசன் குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். மேற்படி வழக்கின் விசாரணையானது மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இவ்வழக்கின் முதல் எதிரியான மீனாட்சியின் கணவர் தீனதயாளன் கடந்த 2022-ம் ஆண்டு வயது முப்பின் காரணமாக உயிரிழந்தார்.
ஆயுள் தண்டனை விதிப்பு
இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பானது தற்போது வெளியாகி குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கினை விசாரித்த அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான செந்தில்குமாரை குற்றவாளி என தீர்மானித்து, மேற்படி குற்றவாளிக்கு ஆயுள் சிறைதண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும் விதித்தார். அபராத தொகையினை கட்டத்தவறும்பட்சத்தில் மேலும் ஒர் ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
எஸ்.பி.பாராட்டு
இதனை தொடர்ந்து வழக்கின் குற்றவாளி செந்தில்குமாரை கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராம.சேயோன் ஆஜராகி சிறப்பாக வாதாடினர். வழக்கினை தண்டனையில் முடிக்க சிறப்பாக பணியாற்றிய அரசு வழக்கறிஞர் ராம.சேயோன், மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் நீதிமன்ற அலுவலாற்றிய காவலர் மாரிமுத்து ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார்.























