விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் அதிரும் மயிலாடுதுறை : மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கைகள்..!
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடையே 100 சதவீத விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வாக்காளர்களிடையே 100 சதவீத விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
மயிலாடுதுறை: தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-க்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, மார்ச் 15, 2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் பணிகளைச் செம்மையாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் கால அட்டவணை: முக்கியத் தேதிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைமுறைகள் கீழ்க்கண்டவாறு திட்டமிடப்பட்டுள்ளன:
* அரசிதழ் அறிவிக்கை & வேட்புமனு தொடக்கம்: 30.03.2026 (திங்கள்)
* வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: 06.04.2026 (திங்கள்)
* வேட்புமனு பரிசீலனை: 07.04.2026 (செவ்வாய்)
* மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: 09.04.2026 (வியாழன்)
*வாக்குப்பதிவு நாள்: 23.04.2026 (வியாழன்)
*வாக்கு எண்ணிக்கை: 04.05.2026 (திங்கள்)
* தேர்தல் நடைமுறைகள் நிறைவு: 06.05.2026 (புதன்)
24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை
தேர்தல் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் உடனுக்குடன் தெரிவிக்கவும், தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்கவும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தங்களின் புகார்களைக் கீழ்க்கண்ட எண்கள் மூலம் பதிவு செய்யலாம்:
* கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-233-9960
* வாக்காளர் உதவி எண் (Voter Helpline): 1950
* கட்டுப்பாட்டு அறை நேரடி எண்: 04364-299960
இந்த எண்கள் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கத் தனிக்குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் அதிரும் மயிலாடுதுறை
"என் வாக்கு - என் உரிமை" என்பதை வலியுறுத்தி, மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் விழிப்புணர்வுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கல்வி நிறுவனங்களில் போட்டிகள்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே ஜனநாயகக் கடமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற ஓவியப்போட்டியில், மாணவர்கள் தங்களின் தூரிகை வழியாக "வாக்களிப்பதன் அவசியம்" குறித்து வரைந்த ஓவியங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.
மகளிர் மற்றும் முதியோர் பங்கேற்பு
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 'கருணாலயம்' முதியோர் இல்லத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதியோர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதேபோல், மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் கிராமங்கள் தோறும் ரங்கோலி கோலங்கள் வரைந்தும், வாகனங்களில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை (Stickers) ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்
ஜனநாயகத் திருவிழாவான இந்த சட்டமன்றத் தேர்தலில், தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் எவ்விதத் தூண்டுதலுக்கும் ஆட்படாமல், தங்களின் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
























