மயிலாடுதுறை MP சுதாவிடம் செயின் பறித்த நபர் கைது! தங்க நகை மீட்பு - டெல்லி போலீஸ் அதிரடி
டெல்லியில் மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் செயினை பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்து பறிகொடுத்த தங்க நகை மீட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதாவிடம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு செயின் பறிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் பிரதிநிதிக்கே பாதுகாப்பு இல்லை என்ற கேள்வியும் பரவலாக எழுப்பப்பட்டது.
நடைபயிற்சியில் ஈடுபட்டபோது தாக்குதல்
கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, எம்.பி. சுதா டெல்லியில் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காலை வழக்கம் போல் நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்புக்கு அருகில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென அவரை நோக்கி வந்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியைப் பறிக்க முயற்சித்தார்.
இந்த எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சியடைந்த எம்.பி. சுதா, அந்த நபரிடம் இருந்து தனது சங்கிலியை காத்துக்கொள்ள கடுமையாகப் போராடினார். ஆனால், அந்த நபர் அவரைத் தாக்கி, அவரது கழுத்தில் அணிந்திருந்த 4.5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்.
காயம் மற்றும் காவல்துறை நடவடிக்கை
இந்தச் சம்பவத்தில் எம்.பி. சுதாவின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர், டெல்லியில் உள்ள சாணக்யபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, செயின் பறிப்பில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களைத் தீவிரமாக தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், சாட்சிகளிடம் விசாரணை நடத்தியும் குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
பாதுகாப்பு குறித்த கேள்வி
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல், டெல்லியின் பாதுகாப்பு நிலவரம் குறித்து பல கேள்விகளும் எழுப்பப்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லியில், உயர் பதவிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கே இதுபோன்ற தாக்குதல் நடப்பது, சாதாரண மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம், டெல்லியின் முக்கியப் பகுதிகளில் கூட குற்றச் செயல்கள் தங்குதடையின்றி நடக்கின்றன என்பதற்கான ஒரு சாட்சியாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலர் குற்றச்சாட்டியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரபரப்பு
இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பதிவிட்டு வருகின்றனர். “எம்.பி.க்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்கள் நிலை என்ன?” என்ற கேள்விகளுடன் பலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம், நாட்டின் தலைநகரில் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் நடவடிக்கை
இந்த சூழலில், செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக எம்.பி சுதா, உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு இமெயில் மூலம் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில், செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை விரைவாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற போது என்னுடைய கழுத்தில் காயம் ஏற்பட்டது. உயர் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தார்.
குற்றவாளி கைது
இந்நிலையில் மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் நகையை பறித்துச் சென்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திருடி சென்ற 4.5 சவரன் தங்க நகையையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக டெல்லி போலீசாரின் தங்களது எக்ஸ் வலைதளத்தில், நாடாளுமன்ற உறுப்பினரின் சங்கிலியைப் பறித்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு செயின் மீட்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும் என்று பதிவிடப்பட்டுள்ளது.






















