வழக்கறிஞர் சங்க அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு வழக்கறிஞர் கவுன்சிலுக்கு ஏன் உத்தரவிடக் கூடாது ? - மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி
ஒரு மனிதன் எவ்வளவு இழிவான வக்கிர குணம் கொண்ட வெறுக்கத்தக்கவராக சமூகத்தால் கருதப்பட்டாலும் சட்ட உரிமைகளை பெற அவருக்கு உரிமை உள்ளது. அதனைப் பெற்றுத் தருவது ஒரு வழக்கறிஞரின் பணி-உயர்நீதிமன்றம் மதுரை கிளை
சிவகங்கையை சேர்ந்த கணபதி, முத்துப்பாண்டி, விக்கி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி "ஒரு மனிதன் எவ்வளவு இழிவான வக்கிர குணம் கொண்ட வெறுக்கத்தக்கவராக சமூகத்தால் கருதப்பட்டாலும் சட்ட உரிமைகளை பெற அவருக்கு உரிமை உள்ளது. அதனை பெற்றுத் தருவது ஒரு வழக்கறிஞரின் பணி. மனுதாரர்கள் காரைக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பயிற்சி செய்து வரும் கணவன், மனைவியை தாக்கிய வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மனுதாரர்களின் குடும்ப பிரச்சினைக்கு காரணம் இந்த வழக்கறிஞர் தம்பதியரே எனக் கருதியதால் அவர்களுக்குள் பிரச்சினை எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் வழக்கறிஞர்கள் என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கோரி ஆஜராக கூடாது என காரைக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றிய வழக்கறிஞர் சங்கத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் கவுன்சிலுக்கு ஏன் உத்தரவிடக் கூடாது? அந்த நிர்வாகிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுக்க கூடாது? என விளக்கம் அளிக்கப்படவேண்டும். ஆகவே மனுதாரர்கள் 30,000 ரூபாயை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு செலுத்தி அந்த ரசீதை காரைக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதை தொடர்ந்து அவர்களை பிணையில் விடுவிக்க வேண்டும் மனுதாரர்கள் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் 15 நாட்களுக்கு தினமும் காலை 10:30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் காரைக்குடி வழக்கறிஞர் சங்கத்திற்கு சங்கத்திடம் இருந்து முறையான விளக்கத்தை பெற்று சமர்ப்பிக்க உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.