'மலரும் புன்னகை' அசத்தல் திட்டத்தால் மாணவர்களுக்கு புதிய நம்பிக்கை - அசத்தும் ஆட்சியரின் செயல்
ரூ.30 ஆயிரம் செலவு செய்து பார்க்கும் பல் மருத்துவம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முயற்சியால் இலவசமாக கிடைத்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டிருக்கும் ”மலரும் புன்னகை” திட்டத்திற்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்களும் மாவட்ட ஆட்சியரை பாராட்டி வருகின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் முகத்தில் சிரிப்பு
பள்ளிக் குழந்தைகள் தங்களுக்குள் பட்டப்பெயர்கள் வைத்துக் கூப்பிட்டுக் கொள்வது வழக்கம். இதில் சில தன்னம்பிக்கை குறைவான குழந்தைகள் பள்ளிக்கு செல்வதையே கஷ்டமாக நினைப்பார்கள். குட்டை, நெட்டை, எத்துப்பல், குண்டு, ஒல்லி என்று உடல்ரீதியாக கிண்டல், கேளி செய்வதை அசவுகரியமாக நினைப்பார்கள். இதனால் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடுவார்கள். இப்படியான நிலையை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் குறிப்பிட்ட நபர்களை தேர்வு செய்து அவர்களின் முகத்தில் சிரிப்பை வரவைத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் சிறந்த முயற்சி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வி.பி.ஜெயசீலன் பல்வேறு சிறந்த பணிகளை செய்து வருகிறார். காபி வித் கலெக்டர் என்ற நிகழ்வு மூலம் மாவட்டத்தில் உள்ள பல முகங்களை சந்தித்து பிரச்னைகளை கேட்டறிந்து அதனையும் சரி செய்தும் கொடுக்கிறார். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பிரச்னைகளை சரி செய்துவருகிறார். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் எத்துப்பல் கொண்ட மாணவர்களுக்கு, “மலரும் புன்னகை” திட்டத்தின் கீழ் இலவசமாக Braces பொருத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் ரூ.30,000 வரை செலவாகும் இச்சிகிச்சையை சி.எஸ்.ஆர்., நிதியின் மூலம் மாணவர்களுக்கு குறைபாடு கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மலரும் புன்னகை
இந்த திட்டம் குறித்து விருதுநகர் மாவட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது..,” கடந்த 2023 டிசம்பர் மாதம் முதல் ’மலரும் புன்னகை’ திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டுவந்தோம். வேறு எங்கும் இல்லாத வகையில் விருதுநகர் மாவட்டத்திற்கு சிறப்புத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கொண்டுவந்தார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் இதில் பயன்பெறுகின்றனர். இதில் 302 மாணவர்கள் முழுமையாக பயன்பெற்றுள்ளனர். 600 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சிகிச்சைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தனியார் மருத்துவமனையுடன் இணைந்து தான் இதனை செய்து முடித்தோம். ஆனால் பயன்பெறும் மாணவர்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவு ஏற்படாது. முழுக்க, முழுக்க இந்த ஸ்கீமில் அடங்கிவிடும். மாணவர்கள் வந்து செல்லும் போக்குவரத்து செலவு, உணவு செலவுகளுக்கு முற்றிலும் இலவசம் தான். இந்த திட்டத்தை பலரும் வரவேற்று வருகின்றனர்” எனவும் தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்கள் நலன் கருத்தில் கொண்டு செயல்படுத்திற்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.





















