(Source: ECI/ABP News/ABP Majha)
மத்திய அரசின் சாதனைகள் குறித்து வீடு, வீடாக எடுத்துக் கூற வேண்டும் - தேனியில் அமைச்சர் பக்கன்சிங் பேச்சு
நுண்ணீர் பாசன திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், உஜ்வாலா யோஜனா உள்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மத்திய எக்கு அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் இணை அமைச்சர் பக்கன்சிங் குலாஸ்தே தேனி மாவட்டத்திற்கு வருகை தந்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அரசு துறை அலுவலர்களுடன் மத்திய அமைச்சர் பக்கன்சிங் குலாஸ்தே ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், நிலுவையில் உள்ள விவரங்கள் குறித்தும், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் துறை வாரியாக அவர் ஆய்வு செய்தார்.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் பக்கன்சிங் குலாஸ்தே பேசும்போது, “மத்திய அரசு ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், உஜ்வாலா யோஜனா உள்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அரசின் இத்தகைய திட்டங்கள் ஏழை மக்களை சென்றடைய அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை துரிதப்படுத்தி, விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்” என்று பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத், மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா, துணைத் தலைவர் ராஜபாண்டியன் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக ஆய்வுக்கூட்டம் நடந்த கூட்டரங்குக்கு வெளியே மகளிர் சுயஉதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து தேனியில் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய இணை மந்திரி பக்கன்சிங் குலாஸ்தே கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ”மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் சாதனைகள் குறித்து வீடு, வீடாக எடுத்துக் கூற வேண்டும். அவ்வாறு செய்தால் தமிழகத்தில் பா.ஜ.க. மேலும் வளர்ச்சி பெறும்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்