ஆசிரியர்கள் வருவதற்கு முன்பே விடுமுறை அறிவிப்பு; பள்ளியை பூட்டி போராட்டம் - நடந்தது என்ன?
தமிழ்நாடு முழுவதும் அனைத்து பார்வர்ட் பிளாக்குகள் அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு பிரமலைக்கள்ளர் சமுதாயக் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போடிநாயக்கனூர் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் அமைந்த அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், முன்னாள் நீதிபதி சந்துருவின் அரசு பள்ளி சீரமைப்பு மற்றும் பெயர் மாற்ற அறிக்கைகளை எதிர்த்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பினர் கள்ளர் பள்ளிகளில் வகுப்பை புறக்கணிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் போடி அணைக்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்குச் சென்ற மாணவ, மாணவியர்களுக்கு ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் வருவதற்கு முன்பே விடுமுறை என கூறி மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர் பார்வர்ட் பிளாக் கட்சியினர். விபரம் அறியாமல் லீவு என்றதுமே மகிழ்ச்சியுடன் ஆரவாரத்துடன் புத்தகங்களை எடுத்து பள்ளியை விட்டு வெளியேறினர் மாணவ, மாணவியர்கள்.
தமிழ்நாடு பள்ளிகளின் சீரமைப்பு மற்றும் பெயர் மாற்றம் குறித்து முன்னாள் நீதிபதி சந்துருவின் தனிநபர் அறிக்கை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளி மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் ஜாதிப் பெயர்களை அகற்றி அரசு பள்ளிகளாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு சீரமைப்பு கருத்துக்கள் குறித்து சுமார் 660 பக்கங்கள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து பார்வர்ட் பிளாக்குகள் அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு பிரமலைக்கள்ளர் சமுதாயக் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் அனைத்திந்திய பார்வர்ட் பிளாக் அமைப்பினர் மற்றும் தமிழ்நாடு பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பினர் கள்ளர் நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் வகுப்பை புறக்கணிக்குமாறு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போடிநாயக்கனூர் மற்றும் அதன் ஒன்றியங்களில் பள்ளி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. போடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அணைக்கரைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளிக்கு சென்று மாணவ, மாணவியர்களுக்கு விடுமுறை என்று கூறி அவர்களை வெளியேற்றி பள்ளிகளை பூட்டி போராட்டம் நடத்தினர்.
பள்ளிக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வருவதற்கு முன்பே அங்குள்ள பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு விடுமுறை என்று கூறி அங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகளை வீட்டிற்கு செல்லும்படி கூறினர். பள்ளி விடுமுறை என்றதும் விவரம் அறியாத பள்ளி மாணவர்கள் ஆரவாரம் செய்தபடி தங்கள் புத்தகங்களையும், பைகளையும் எடுத்துக்கொண்டு பள்ளியில் இருந்து வெளியேறினர். வெளியேறிய பள்ளிக்கு பூட்டு போடப்பட்டு அங்கு வகுப்பு புறக்கணிப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பள்ளி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு, அரசு கள்ளர் பள்ளிகளுக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்துவதற்காக முன்னாள் நீதிபதி சந்துருவின் வாயை வாடகைக்கு எடுத்து கள்ளர் பள்ளிகளுக்கு சொந்தமான சொத்துக்களை கையகப்படுத்துவதற்காக நாடக மாடி வருகிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை பார்வர்ட் பிளாக் கட்சியினர் முன்வைத்தனர்.