பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மீது பொய் புகார் கூறியதாக துப்புரவு பணியாளர்கள் போராட்டம்
பொய் புகார் கொடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி தேவதானப்பட்டி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திமுகவைச் சேர்ந்த தேவதானப்பட்டி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மீது எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய் புகார் கொடுத்த நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரி பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சி மன்றத்தில் ஒன்பதாவது வார்டு உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த நிபந்தன் வெற்றி பெற்று பேரூராட்சி மன்ற துணைத் தலைவராக பொறுப்பு உள்ளார். கடந்த இரண்டாவது மாதத்தில் துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதாகவும்,
குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து குடிநீர் வழங்க கோரி துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் முறையிடச் சென்ற துப்புரவு பணியாளர்களை ஜாதி பெயரை கூறி அவதூறாக பேசியதாக அறிவழகன் என்ற தனிநபர் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேவதானப்பட்டி பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றும் 40-க்கும் மேற்பட்டோர் துப்புரவு பணியாளர் அல்லாத தனி நபர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் நிபந்தன் ஜாதி பெயரைச் சொல்லித் திட்டியதாக பொய் புகார் கொடுத்த அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி தேவதானப்பட்டி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் புகார் கொடுத்த நபர் துப்புரவு பணியாளர் அல்லாத நபர் என்றும், நடைபெறாத செயலை சித்தரித்து தனது சுயலாபத்திற்காக பொய் புகார் கொடுத்துள்ளதாகவும், பொய் புகார் கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.