பதினெட்டாம், பிடிஆர் கால்வாய்களில் பாசனத்திற்கு நீர் திறக்க கோரி விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பைபாஸில் பதினெட்டாம் கால்வாய் மற்றும் பி டி ஆர் கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி விவசாய சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரக்கூடிய நீரினை கொண்டு விவசாயம் செய்யக்கூடிய மாவட்டமாகும். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரக்கூடிய தண்ணீர் கொண்டு இங்கு நெல், வாழை, திராட்சை மற்றும் மானாவரி நிலங்களில் பல்வேறு விவசாயிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இரு போக விவசாயத்திற்காக ஐந்து மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் ஜூன் மாதங்களில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.இதேபோன்று தேனி மாவட்டம் லோயர் கேம்பில் இருந்து போடி வரை மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக 18-ம் கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டது.
இதேபோன்று உத்தமபாளையம் பகுதியில் இருந்து ஏரசக்கநாயக்கனூர் பகுதிகளில் விவசாயம் செய்வதற்காக பிடிஆர் கால்வாய் அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் முல்லைப் பெரியாறு அணை நீர் இருப்பை பொறுத்து நவம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தண்ணீர் திறப்பதற்கு அரசாணை உண்டு. தற்போது முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் போதி இருப்பு உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக முல்லை பெரியாறு அணையில் இருந்து பதினெட்டாம் கால்வாய் மற்றும் பி டி ஆர் கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த தண்ணீரை கொண்டு பாசன வசதி பெறும் சுமார் 10,000 ஏக்கர் நிலங்கள் தண்ணீர் இன்றி காய்ந்த நிலையில் உள்ளது.இதனை அடுத்து இந்தப் பகுதிகளில் பாசன வசதி பெறும் விவசாயிகள் விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட தொடர்ச்சியாக தமிழக அரசுக்கு பி டி ஆர் கால்வாய் மற்றும் பதினெட்டாம் கால்வாய்களில் தண்ணீர் திறக்கக் கோரி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
எனினும் தண்ணீர் திறக்கப்படாததால் இன்று உத்தமபாளையம் பைபாஸ் திடலில் பெரியார் வைகை பாசன விவசாயம் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தைச் சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு உடனடியாக பதினெட்டாம் கால்வாய் மற்றும் பி டி ஆர் கால்வாய் பகுதிகளில் இருந்து பாசன நிறத்திற்கு தண்ணீர் திறக்க கோரி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணமாக கோஷங்களை எழுப்பினர்.தொடர்ந்து விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்கள் இந்த தண்ணீரை கொண்டு பாசன பெரும் விவசாயம் குறித்தும் விவசாயிகளின் நிலை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.
இதுகுறித்து விவசாய சங்கத்தினர் கூறுகையில், "முல்லைப் பெரியாறு அணையில் தற்போது போதிய அளவிலான தண்ணீர் உள்ளது. அதேபோன்று வைகை அணையிலும் தண்ணீர் போதிய அளவில் உள்ளது. ஆனால் இந்த தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்வளத் துறை அதிகாரிகள் முறைப்படுத்தாமல் தண்ணீரை வீணடிக்கின்றனர். எனவே அரசாணையில் உள்ளபடி உடனடியாக பதினெட்டாம் கால்வாய் மற்றும் பிடிஆர் கால்வாய் போன்றவற்றில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் இல்லையென்றால் தங்களது போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தனர்.