தேனி: சின்னமனூரில் பாஜக பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு
சின்னமனூரில் பாஜக பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் புகார்.,
தேனி மாவட்டம் சின்னமனூர் கந்தையா தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவர், பா.ஜ.க.வில் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ளார். மேலும் அப்பகுதியில் பள்ளிக்கூடமும் நடத்தி வருகிறார். சின்னமனூர் சார்பதிவாளர் அலுவலகம் அருகே இவருக்கு சொந்தமான இடத்தில், தனது காரை பிரபாகரன் நிறுத்துவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு காரை, அப்பகுதியில் நிறுத்திவிட்டு அவர் தனது வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்தனர். பின்னர் அந்த கார் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர். காலையில் தனது கார் கண்ணாடிகள் உடைந்து கிடந்ததை கண்ட பிரபாகரன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பா.ஜ.க. நிர்வாகிகள் அங்கு திரண்டனர். இதேபோல் சின்னமனூர் போலீசாரும் அங்கு விரைந்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் அங்கு வரவழைக்கப்பட்டது. கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச் சென்று நாய் நின்றது. தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்து கைரேகைகளை சேகரித்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு.. பள்ளிக்கல்வித்துறை சொன்ன காரணம் இதுதான்!
சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதற்கிடையே கார் கண்ணாடியை உடைத்த நபர்களை கைது செய்யக்கோரி சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் பிரபாகரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மர்ம நபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில், மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி, நகர தலைவர் மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் பலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர். பிரபாகரனின் கார் கண்ணாடிகளை உடைத்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு காவல் பாதுகாப்பு அளிக்கக்கோரியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, கார் கண்ணாடி உடைப்பு சம்பவத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.