தேனி: கஞ்சா வழக்கில் தொடர்புடைய 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு
தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கஞ்சா வழக்கில் சிக்கிய 5 பேர் மாவட்ட கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு.
தமிழக கேரள எல்லை மாவட்டங்களில் முக்கிய மாவட்டமாக பார்க்கப்படும் தேனி மாவட்டம் இரு மாநில எல்லையோர மாவட்டமாக இருப்பதால் போதை பொருட்கள் கடத்தல் , கனிமவள திருட்டு போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகளவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கும் வகையில் காவல் துறையும் செயல்பட்டு குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Mother's day special: ஹீரோயின் டூ அம்மா...! தமிழ் சினிமா கண்ட பல வகையான அம்மாக்கள்..
அந்த வகையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, போக்சோ குற்றங்கள், திருட்டு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கஞ்சா வியாபாரிகள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கோடாங்கிபட்டி பகுதியில் கஞ்சா கடத்திய சிலரை தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பிடித்தனர். இந்த கடத்தல் வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, காமயகவுண்டன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த காளிமுத்து மனைவி அங்குத்தாய் (48), கோடாங்கிபட்டியை சேர்ந்த செல்வம் மனைவி சரஸ்வதி (57), பெருமாள் மனைவி சந்திரா (51), குள்ளப்பகவுண்டன்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி சுமித்ரா (40), காமயகவுண்டன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி சாந்தி (48) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 24 கிலோ 700 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 5 பேரும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைதான 5 பேர் மீதும் ஏற்கனவே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரியவந்தது. தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவதால் அவர்கள் 5 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் பெண் கஞ்சா வியாபாரிகளான அங்குத்தாய், சரஸ்வதி, சந்திரா, சுமித்ரா, சாந்தி ஆகிய 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டார். இதையடுத்து நிலக்கோட்டை பெண்கள் சிறையில் இருந்த அவர்கள் 5 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்