பயிற்சி மருத்துவர் செலுத்திய ஊசியால் பெண் மரணமா..?- தேனி மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பயிற்சி மருத்துவர் செலுத்திய ஊசியின் காரணமாகவே மகள் உயிரிழந்ததாகவும், உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக்கோரியும் வழக்கு.
உயிரிழந்த கனிமொழியின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய தேனி மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி கண்டமனூரைச் சேர்ந்த பூங்கொடி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது மகள் கனிமொழிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கருவுற்ற அவரை ஜூன் 8-ம் தேதி பிரசவத்திற்காக ராஜதானி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்த நிலையில், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஜூன் 15ஆம் தேதி தையல் பிரிக்கப்பட்டு, தாயும் சேயும் நலமாக இருந்தனர். மறுநாள் பயிற்சி மருத்துவர் எனது மகளுக்கு ஊசி ஒன்றை போட்டார். அதைத்தொடர்ந்து எனது மகளுக்கு கடுமையான வலி ஏற்பட்ட நிலையில், 21 ஆம் தேதி எனது மகள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனது மகளின் மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்காமல் உடலை பெற்றுக் கொள்ளுமாறு மிரட்டினர். காவல்துறையினரும் வற்புறுத்தினர். இவ்வாறு மிரட்டியதால் எனது மகளின் உடலை சத்திரப்பட்டி கிராம மயானத்தில் அடக்கம் செய்தோம். பயிற்சி மருத்துவர் தவறான ஊசி செலுத்தியதே எனது மகளின் இறப்பிற்கு காரணம். ஆகவே எனது மகளின் உடலை 2 மூத்த தடய அறிவியல் துறையின் பேராசிரியர்கள் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்யவும், மகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கனிமொழியின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய தேனி மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு உத்தரவிட்டு வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
மற்றொரு வழக்கு
மதுரை சுங்கம் பள்ளிவாசல் வரவு செலவு விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வழங்க உத்தரவிடக்கோரி வழக்கில், மனுதாரர் கேட்கும் தகவலை எட்டு வாரத்தில் வழங்க மாநில தகவல் ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஜாகிர் உசேன் தாக்கல் செய்த மனு. மதுரை நெல் பேட்டை கொல்லம் பட்டறை சுங்கம் பள்ளிவாசல் வக்பு வாரிய நிர்வாகத்தின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளிவாசல் மதுரையில் மிகப்பெரிய பள்ளிவாசல் ஆகும் அதிக இஸ்லாமிய ஜமாத் உறுப்பினர்களை கொண்ட பள்ளிவாசலாகவும் செயல்பட்டு வருகின்றது.
இந்த இஸ்லாமிய தொழுகை பள்ளி வாசலின் வரவு செலவு விவகாரங்களை தகவல் அறியும் சட்டத்தின் மூலம்
2012 முதல் ஜனவரி 2021 தேதி வரை 10 ஆண்டுகளுக்கான பள்ளிவாசல் வரவு செலவு வங்கிப் பரிவர்த்தனை ஆகிய வரவு, செலவு கணக்குகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்குமாறு வக்பு வாரிய பொது தகவல் அதிகாரிக்கு மனு செய்திருந்தேன் இதுவரை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எனக்கு பதில் வரவில்லை. எனவே விதிப்படி எனக்கு பதில் அளிக்க உத்தரவிட மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவலுக்கு உரிய பதில் இல்லை இது குறித்து ஆணையரிடமும் மேல் முறையிடப்பட்டது ஆனால் உரிய தகவல் தெரிவிக்கவில்லை என்றார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி மனுதாரர் கோரி உள்ள தகவல்களை சட்டத்திற்கு உட்பட்டு 8 வாரங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைத்தார்.