கேரளாவில் முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்
இந்தியாவின் முக்கியமான நிலப்பரப்பில், முன்கூட்டியே பருவமழை தொடங்குவது இதுவாகத்தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட (ஜுன் 1) நான்கு நாட்களுக்கு முன்னதாக மே 27ம் தேதியில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த வருடம் தென்மேற்கு பருவமழை இந்த மாதம் மே 27-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் கேரளத்தில் ஜூன் 1-இல் தொடங்கும். நிகழாண்டில், வழக்கத்தைவிட 4 நாள்களுக்கு முன்னதாக மே 27-ஆம் தேதியே தொடங்குவதற்கு சாதகமான சூழல்கள் உள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த தென் மேற்கு பருவமழை காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கும் மழை பொழிவு கிடைக்கும். வானிலை ஆய்வு மையத்தின் எதிர்பார்ப்புப்படி, வரும் மே 27-ம் தேதி பருவமழை தொடங்கினால், கடந்த 2009-ம் ஆண்டு மே 23-ம் தேதி பருமழை தொடங்கியதற்கு பின்பு, இந்தியாவின் முக்கியமான நிலப்பரப்பில், முன்கூட்டியே பருவமழை தொடங்குவது இதுவாகத்தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முதன்மையான பருவமழை வழக்கமாக ஜுன் 1-ம் தேதி கேரளாவை வந்தடையும்.
இந்திய வானிலை ஆய்வு மையம், கடந்த 2023-ம் ஆண்டில் பருவமழை சராசரியாக, 96 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. என்றாலும் உண்மையில் அந்த ஆண்டு சராசரி அளவை விட குறைவாக 94 % மழையே பதிவாகியிருந்தது. அதே ஆண்டு பருவமழை நீண்டகால சராசரி அளவான 868.6 மி.மீ. அளவை விட குறைவாக 820 மி.மீ. மட்டுமே பதிவாகியிருந்தது. 2023-ம் ஆண்டுக்கு முன்பாக தொடர்ந்து நான்கு ஆண்டுகள் இந்தியா சரசாரி மற்றும் சராசரிக்கும் கூடுதலான மழையை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு (2024) நீண்ட கால சராசரியை விட கூடுதலாக 108 சதவீதம் மழை பதிவாகி இருந்தது. இந்தியாவின் மழைப் பொழிவில் 70 சதவீதம் பருவமழையால் மட்டுமே கிடைக்கிறது. பருவமழை என்பது இந்தியப் பொருளாதாரத்துக்கான உயிர்நாடியாகும். இந்தியாவின் விவசாயப்பரப்பில் 51 சதவீதம், அதாவது உற்பத்தியில் 40 சதவீதம் பருவமழையை நம்பியே உள்ளது. 47 சதவீதம் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக விவசாயத்தையே நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் பருவமழை அதிகரித்தால் மட்டுமே இந்தாண்டு குறிப்பாக தேனி மாவட்டத்தின் விவசாயத்தின் உயிர் நாடியாக இருந்து வரும் முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தால் மட்டுமே கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெறும் முதல் போக சாகுபடி பணிகள் ஜீன் முதல் வாரத்தில் நடைபெறும். பெய்யவிருக்கும் பருவ மழை குறைந்தால் ஜீன் முதல் வாரத்தில் ஆரம்பமாகும் முதல் போக நெல் சாகுபடி பணிகளுகள் காலதாமதமாக நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது.





















