(Source: ECI/ABP News/ABP Majha)
தேனி மருத்துவமனையின் கோரமுகம்: பேக் செய்த சடலத்தை பிணவறையில் தேடிய உறவினர்கள்!
‛எவ்வாறு உடலை எடுத்துச் செல்வது’ என உறவினர்கள் கேட்ட போது, ‛நீங்களே போய் எடுத்துக் கொள்ளுங்கள்...’ என மருத்துவ நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிணவறை பகுதிக்கு சென்ற உறவினர்கள், பேக் செய்யப்பட்டிருந்த கொரோனா சடலங்களை ஒவ்வொன்றாக அவிழ்த்து, இறுதியில் தண்டபாணியின் உடலை கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் நோய் தொற்றால் உயிரிழந்தவரின் உடலை அடையாளம் காண முடியாமல் உறவினர்கள் பிணவறையில் வைக்கப்பட்ட உடலை தேடி அலைந்த பரிதாபம், தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நடந்துள்ளது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே நல்ல கருப்பன் பட்டி எனும் ஊரைச் சேர்ந்தவர் பால தண்டபாணி. இவர் கடந்த 30-ஆம் தேதி காய்ச்சல் காரணமாக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்றார். மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இவரை தேனி தலைமை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பியுள்ளனர் . கடந்த இரண்டு நாட்களாக தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனை முடிவில் தெரிய வந்தது. இந்நிலையில் கொரோா தொற்றின் தீவிரம் அதிகரித்து திடீரென மூச்சு திணறல் ஏற்பட்ட அவர், மே 31 ஆம் தேதி உயிரிழந்துள்ளார் .
அவர் இறந்த தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், சடலத்தை பெற அவர்கள் வந்துள்ளனர். உடல், பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. உடலை எடுத்துச் செல்வதற்கான எந்த உதவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் செய்ய முன்வர வில்லை. ‛எவ்வாறு உடலை எடுத்துச் செல்வது’ என உறவினர்கள் கேட்ட போது, ‛நீங்களே போய் எடுத்துக் கொள்ளுங்கள்...’ என மருத்துவ நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிணவறை பகுதிக்கு சென்ற உறவினர்கள், பேக் செய்யப்பட்டிருந்த கொரோனா சடலங்களை ஒவ்வொன்றாக அவிழ்த்து, இறுதியில் தண்டபாணியின் உடலை கண்டுபிடித்துள்ளனர்.
எந்த பாதுகாப்பு உபகரணங்களும், கவச உடைகளும் இல்லாமல் கொரோனா சடலங்களை கையாண்ட உறவினர்கள், பின்னர் சடலத்துடன் சொந்த ஊரான நல்ல கருப்பன்பட்டி கொண்டு சென்று, அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர். பொதுவாகவே கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதில் பல விதிமுறைகள் பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எதையும் பின்பற்றாமல் இறுதிச்சடங்கு நடந்துள்ளது. வழிகாட்டவோ, வழிநடத்தவோ கடைசி வரை யாரும் வரவில்லை. சடலங்களை ஏதோ கிளாக் ரூமில் வைத்திருக்கும் பொருளை போல பொதுமக்கள் எடுத்துச் செல்லும் அவல நிலை தேனியில் ஏற்பட்டுள்ளது. கிளாக் ரூமிலாவது டோக்கன் இருக்கும். எளிதில் கண்டுபிடித்து விடலாம். இங்கு பேக் செய்யப்பட்ட சடலத்தை கண்டுபிடிக்க கூட முடியாத நிலையில் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து தேனி அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது,‛‛ இது குறித்து தங்களுக்கு எந்தவித தகவலும் தெரியாது என்றும், எந்த தகவலும் தங்களுக்கு வரவில்லை,’ என பதிலளித்தனர். பிணவறையில் சடலங்களை தேடும் அவல நிலை நடப்பது கூட மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியவில்லை என்றால், சிகிச்சையில் இருப்போரின் நிலைஎப்படி தெரியும் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. கண்ணுக்கு தெரிந்த தண்டபாணி மட்டுமல்ல, அங்கே குவிக்கப்பட்டிருக்கும் அத்தனை சடலங்களுக்கும் இதே நிலை தான்.