மதுபோதையில் தகராறு செய்தவர்களை கண்டித்த எஸ்.ஐ மாரடைப்பால் மரணம்...!
’’சார்பு ஆய்வாளர் இந்திரன் உடல் அவரது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது’’
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக சந்திரன் பணிபுரிந்து வந்துள்ளார். சார்பு ஆய்வாளர் இந்திரன் பொதுமக்களுடன் மிகவும் இனிமையாக உற்ற நண்பனாகவும் கனிவாகவும் பழகி வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் பணி நேரத்தில் மிகவும் பொறுப்புடனும் அக்கரையுடனும் நடந்து அந்த பகுதி முழுவதும் நற்பெயர் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு நகர் பேருந்தில் மதுபோதையில் சிலர் பிரச்சனை செய்வதாக காவல் நிலையத்துக்கு புகார் வந்துளது. இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை பொது இடத்தில் மதுபோதையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்யக்கூடாது. பேசாமல் வீட்டுக்குச் செல்லுங்கள், இல்லையென்றால் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என, அவர்களை கடுமையாக எச்சரித்துள்ளார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், நெஞ்சில் கை வைத்தபடி மயங்கி கீழே விழுந்துள்ளார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பணியில் உயிரிழந்த சார்பு ஆய்வாளரின் உடலை கைப்பற்றிய சக போலீசார் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நேற்று இரவு பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த தங்கச்சிமடம் சார்பு ஆய்வாளர் இந்திரன் உடல் அவரது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த கொரானா காலத்திலும் காவல் துறையினர் இரவு, பகல் பாராமல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சார்பு ஆய்வாளர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் பணிபுரிந்த சக காவலர்கள் கூறுகையில், பணி நேரத்திற்கு தவறாமல் காவல் நிலையத்திற்கு வந்து விடுவார். மிகவும் சிக்கனமானவர். அதேபோன்று யாரிடமும் எந்த ஒரு பிரதி பலனும் எதிர்பார்க்காமல் கடமையை செய்வார். பொதுமக்களிடத்தில் மிகவும் கனிவுடன் நண்பனைப் போல் பழகுவார். அவருக்கு பணி நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அவர் குடும்பத்தாருக்கு பெரும் இழப்பை தந்துள்ளது என வருத்தம் தெரிவித்தனர்.
தஞ்சை பெரியகோயிலில் குறைந்துபோன உண்டியல் வசூல் - 10.88 லட்சம் மட்டுமே வசூலானது
தனித்துவமான திராவிடகட்டிடக்கலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தமிழ் மக்களின் நாகரிகத்திற்கும் சான்றாக அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் தஞ்சை பெரியகோவில் உலகளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு, வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து, கோவில் நிர்மாணம், கோபுர அமைப்பு, கட்டிட நுட்பம் ஆகியவற்றை குறித்து, அறிந்து, நேரில் காணும் ஆர்வத்தில், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலான தஞ்சாவூர் பெரிய கோயில் எனும் பிரகதீஸ்வரர் கோயிலிலுள்ள 11 உண்டியல்களை எண்ணும் பணி நடைபெற்றது.
கோயிலுள்ள, மூலவர் பிரகதீஸ்வரர், பெரியநாயகிஅம்மன், வராஹி, விநாயகர், முருகன், கருவூரார் சன்னதி உள்பட 11 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், பக்தர்கள் பணம், நகை உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியல்கள் மாதம் ஒருமுறை குறிப்பிட்ட தினத்தில் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, நேற்று 11 உண்டியல்களும் திறந்து, காணிக்கை பணம் எண்ணும் பணியில் அலுவலர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுயயுதவிக்குழுவினர் ஈடுபட்டனர்.
இப்பணியை இந்து அறநிலையத்துறை தஞ்சை உதவி கமிஷனர் கிருஷ்ணன் தலைமையில், செயல் அலுவலர் மாதவன் உள்பட அதிகாரிகள் பார்வையிட்டனர். இறுதியில் 11 உண்டியல் மூலம், 10 லட்சத்து, 88 ஆயிரத்து, 650 பணம் வசூலாகியிருந்தது. இதில், கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை இல்லாத காரணத்தால், வெளிநாட்டு கரன்சிகளும், தங்கம், வெள்ளி நகைகள் ஏதும் இம்முறை காணப்படவில்லை, பெருமளவு வசூல் குறைந்துள்ளது என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.