திண்டுக்கல்லில் 20 லட்சம் மதிப்புள்ள 1000 கிலோ குட்கா பறிமுதல்
’’திண்டுக்கல்லில் குட்கா கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது’’
ஓசூரில் இருந்து மதுரைக்கு தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை ரோந்து போலிசார் சின்னாளபட்டி அருகே திண்டுக்கல், மதுரை 4 வழிச் சாலையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது ஒரு மினி லாரியில் சாத்துகுடி, அன்னாசி, தர்பூசணி ஆகிய பழங்கள் 20 மூட்டைகளில் இருந்தது. போலீசார் பழ மூடைகளை ஆய்வு செய்தனர், அப்போது புகையிலை வாடை வந்ததை அடுத்து பழ மூட்டைகளை அகற்றி சோதனை நடத்தினர்.
பழ மூட்டைகளுக்கு அடியில் 27 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். இதனை தொடர்ந்து அந்த மினி லாரியை அம்பாத்துரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தகவலறிந்து வந்த திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் விஜயகுமாரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் நேரில் வந்து பிடிப்பட்ட குட்கா மூட்டைகளை பிரித்து ஆய்வு செய்தனர். இந்த குட்கா பொருட்கள் கடத்தல் தொடர்பாக தூத்துகுடியை சேர்ந்த பிரசாத் (29), ஈஸ்வரன் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதன் மதிப்பு சுமார் 20 லட்சம் ஆகும். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்துவதையும், விற்பனை செய்வதையும் தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. திண்டுக்கல் வழியாக மதுரைக்கு குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து நெடுஞ்சாலை ரோந்து போலிசார் ஆய்வு செய்தனர். அப்போது பழ மூட்டைகளுக்குள் மறைத்து தடை செய்யப்பட்ட 27 மூட்டைகளில் 1000 கிலோ குட்கா பொருட்கள் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டு பிடிக்கப்பட்டது.
இதன் சந்தை மதிப்பு 20 லட்சம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளி, கல்லூரி தொடங்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் குட்கா, புகையிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் உட்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 20 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் போலி வழக்கறிஞர் கைது, தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
போலி நீதிமன்ற ஆவணங்களை தயாரித்த போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு
அரசு நிலங்களை பட்டா போட்டு கொடுத்த அதிகாரிகள் பணீ இடை நீக்கம் தெரிந்துகொள்ள,
தேனியில் 90 ஏக்கர் அரசு நிலத்தை தனிநபரின் பெயரில் பட்டா கொடுத்த 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்