பழனி முருகன் கோவில் உண்டியல் நிரம்பியதும் எண்ணப்பட்டது: வருவாய் எவ்வளவு தெரியுமா?
பழனி மலைக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது தங்க நகைகளை திருடிய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் நிரம்பியதும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். இதன்படி கடந்த புதன்கிழமை பழனி கோவில் கார்திகை மண்டபத்தில் வைத்து உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. தற்போது கோடை காலத்தில் பழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர திருவிழா கொண்டாடப்படுகிறது.
சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்கள், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்கள் என 14 நாட்கள் அக்னி நட்சத்திர கழு திருவிழாவாக கொண்டாடப்படும். இந்த 14 நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் காலை, மாலை வேளையில் பழனி கிரிவல வீதிகளில் வலம் வந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.
கோவிலுக்கு வரும் வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவிலில் உள்ள உண்டியல்களில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பழனி கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு 25 நாட்கள் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
’சிறை உறுதி’: அவகாசம் கேட்ட் சித்து - முடியவே முடியாதுனு மறுத்த நீதிமன்றம்
இதில் 974 கிராம் தங்கமும், 9 ஆயிரத்து நூற்று 11 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது. மேலும் 2 கோடியே 20 லட்சத்து 65 ஆயிரத்து 120 ரூபாய் பணம் கிடைத்துள்ளது. மற்றும் 340 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது.உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆனையர் நடராஜ் நகையை சரிபார்ப்பு அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பணியாளர்கள் ஊழியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.அப்போது பழனி கோவிலில் பொருட்கள் பாதுகாப்பு அறையில் பணிபுரியும் பாக்கியலட்சுமி(44) என்ற ஊழியர் ஒருவர் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் போது காலில் ரப்பர்பேண்ட் வைத்து 10.8 கிராம் அளவுள்ள தங்க நகையை நூதனமாக திருடியுள்ளார்.
அப்போது உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து கோவில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பாக்கியலட்சுமியை கோவில் ஊழியர்கள் சோதனையிட்டதில் காலில் நகையை மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாக்கியலட்சுமி மீது அடிவாரம் காவல் நிலையத்தில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாக்கியலட்சுமியை கைது செய்து நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது கோவில் இணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில், சிசிடிவி காமிரா கண்காணிப்பில் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த மூன்று முறை நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது கோவில் ஊழியர் ஒருவர் 90 ஆயிரம் ரூபாய் திருடியதும், கடந்த மாதம் தங்கத்தினால் ஆன வேல் ஒன்றை துப்புரவு பணியாளர் கணேசன் என்பவர் திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டனர். இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக பெண் ஒருவர் திருடி அகப்பட்டு சிறைக்கு சென்றுள்ளது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி சரியாக நடைபெறுகிறதா? என்ற சந்தேகம் தற்போது பக்தர்களிடையே எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்