Valentine's Day | காதலர் தினத்தை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த காதல் ஜோடிகள்
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 20 பூக்கள் கொண்ட கொய்மலர்க்கொத்து 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையான நிலையில் தற்போது 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை
காதலர் தினத்தை கொண்டாட சர்வதேச சுற்றுலா நகரான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காதல் ஜோடிகள் குவிந்துள்ளனர். இது தவிர நேற்றும், நேற்று முன்தினமும் வாரவிடுமுறை தினம் என்பதால் கொடைக்கானல் நகருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
இதனிடையே கொடைக்கானலுக்கு வருகைபுரிந்த காதலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அங்கு நிலவிய இதமான சீதோஷ்ணநிலை மாலையிட்டு வரவேற்பது போல் இருந்தது. மாலை நேரத்தில் மேக மூட்டங்கள் தரை இறங்கியதை அவர்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்து புகைப்படங்கள் எடுத்தனர். அத்துடன் சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி, ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றில் பூத்துக்குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்ததுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக பூங்காக்களில் இளம்ஜோடிகளின் வருகை அதிகம் இருந்தது. சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் கொடைக்கானலில் பிரகாசபுரம், குண்டுப்பட்டி, கவுஞ்சி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பசுமை குடில்கள் அமைத்து உயர்ரக கொய்மலர்களான காரனேசன், ஜெர்பரா மற்றும் பல்வேறு வண்ண ரோஜாக்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த கொய்மலர்கள் சென்னை, பெங்களூரு, மும்பை, புதுடெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்