முல்லைப் பெரியாறு: அணையில் நீர் மட்டம் உயர்வு! கேரளாவில் பதற்றம்! விவசாயிகள் கோரிக்கை!
“ரூல்கர்வ்” என்ற விதிமுறைப்படி ஜூன் 30ம் தேதி மட்டுமே அணையில் தண்ணீர் தேக்க முடியும் என்பதால் முதற்கட்டமாக உபரிநீரை திறக்க தமிழக நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
கேரள மாநிலத்தை பொறுத்தவரையில் தென் மேற்கு பருவமழை காலம் என்றாலே அப்பகுதி மக்களுக்கு ஒரு வித சிரமம்தான். கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து, ஒரு வாரம் கனமழை கொட்டித்தீர்த்தது. பின்னர் ஒரு வாரம் இடைவெளிக்கு பின் மீண்டும் தீவிரமடைந்தது. இதனால், இடுக்கி மாவட்டம் முண்டக்கை பகுதியில் வெள்ளப்பெருக்குடன், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் நேற்று அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிட்டது. எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், திருச்சூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ள நிலையில், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனர். “ரூல்கர்வ்” என்ற விதிமுறைப்படி ஜூன் 30ம் தேதி மட்டுமே அணையில் தண்ணீர் தேக்க முடியும் என்பதால் முதற்கட்டமாக உபரிநீரை திறக்க தமிழக நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை கேரள அரசுக்கு அனுப்பிய நீர்வளத்துறை இரவு நேரங்களில் தண்ணீர் திறக்க வேண்டாம் என்ற கோரிக்கையை ஏற்றுள்ளது. இதற்கிடையே ரூல்கர்வ் முறையை தமிழக அரசு நீக்க வேண்டும் எனவும், அது கேரள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய விவசாயிகள் அணையில் நீர்மட்டம் உயர்வதையும் உபரிநீர் திறப்பதையும் கேரள அரசு தவறாக சித்தரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே ரூல்கர்வ் முறையை கைவிட்டு அணையின் நீர்மட்டம் 142 அடிக்கு உயர்வதை அனுமதிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மூன்று நாட்கள் முன்பு வரை இடுக்கி மாவட்டம் மூணாறு உட்பட பல பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் படகு சவாரி மற்றும் சாகச சுற்றுலா மையங்கள் அனைத்தும் அடைத்து பூட்டப்பட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது.
ஆனால் தற்போது இரண்டு நாட்களாக மழை குறைந்து பரவலாக பெய்து வரும் நிலையில் மாட்டுப்பட்டி, குண்டளை மற்றும் செங்குளம் போன்ற அணைக்கட்டுகளில் படகு சவாரி நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதே நேரம் வரும் நாட்களில் கன மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வரவு மிக குறைவாகவே உள்ளது. இதனால் சுற்றுலாவை நம்பி வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.





















