மேகமலை புலிகள் சரணாலயம்: "புலிக்குட்டி கொடுங்கள்!" - கிராம மக்களின் வினோத எதிர்ப்பு
கிராமங்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் குறித்து சர்வே செய்து, அதனை ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்யச் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
2021-ம் ஆண்டு மேகமலை பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணலாயமாக அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலய எல்லைக்குள் வருஷநாடு, கடமலைக்குண்டு, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள 98 கிராமங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கிராம மக்களை வெளியேற்றுமாறு 2022-ல், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கிராம மக்கள் போராட்டங்கள் நடத்தவே மக்களை அப்புறப்படுத்தும் பணிகள் நின்றன. தொடர்ந்து, வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசால் அதிகாரமளிக்கப்பட்ட குழு (CEC) ஒன்றை நியமித்து இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யச் சொன்னது. அந்தக் குழுவின் ஆய்வில், கண்டமனூர், வருஷநாடு, சின்னமனூர், மேகமலை ஆகிய பகுதிகளில் 4,601 ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், இதனால் 5072 ஹெக்டர் நிலம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாகவும் கடந்த வருடம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
அந்தக் குழு கொடுத்த அறிக்கையின்படி, வரும் ஆக்ஸ்ட் 28-ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், இதை மாநில அரசு செய்யத் தவறினால் மத்திய அரசால் அதிகாரமளிக்கப்பட்ட குழு துணை ராணுவப் படையை நிலை நிறுத்தவும் பரிந்துரைக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பின் முதல் கட்டமாகவே தற்போது ரிசார்ட்கள் மூடப்பட்டுள்ளன. இனி அடுத்தபடியாக, மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட இப்பகுதியில், கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வழக்கமான கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், தங்கள் பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகமாக மாற்றப்பட்ட பின் வனத்துறையினர் விதிக்கும் கட்டுப்பாடுகளால் கடும் சிரமங்களைச் சந்திப்பதாகக் கூறினர்.
வனத்துறையினரின் இந்த கடும் கட்டுப்பாடுகளுக்குத் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், "எங்கள் பகுதியில் புலிகள் நடமாட்டம் உள்ளதாகக் கூறி பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறீர்கள். அதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, எங்களுக்கும் வீட்டுக்கு ஒரு புலிக்குட்டியைக் கொடுங்கள், நாங்கள் அதை வளர்த்துக் காட்டுகிறோம்" என நகைச்சுவையாகவும், அதே சமயம் தங்களின் குமுறலாகவும் இக்கோரிக்கையை முன்வைத்தனர். பொதுமக்களின் இந்த வினோதமான கோரிக்கையைத் தீர்மானமாக எழுத அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். வனத்துறையின் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் புலிக்குட்டி கேட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்படுவதாவது “மேகமலையில் உள்ள வணிகப் பயன்பாடு ஆக்கிரமிப்புக் கட்டடங்களை மட்டுமே நீக்கச் சொல்லியிருக்கிறார்கள். அங்குள்ள கிராமங்கள் மற்றும் ஆக்கிர மிக்கப்பட்ட நிலங்கள் குறித்து சர்வே செய்து, அதனை ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்யச் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த அறிக்கைக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் கொடுக்கவிருக்கும் தீர்ப்பை பொறுத்துதான் அடுத்த கட்ட வேலைகள் நடக்கும்” என்றார். மேகமலை, வருஷநாடு, கடமலைகுண்டு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் வசிப்பிடத்தில் இருந்து தாங்கள் துரத்தப்படவிருக்கும் அச்சத்தில் உள்ளனர்.
மூன்று தலைமுறைகளாக வாழும் அந்த மக்களை உடனே வெளியேற்ற வேண்டுமென்றால் அவர்கள் எங்கு செல்வார்கள்? அவர்களுக்கு என்ன மாற்று ஏற்பாட்டை அரசு செய்து கொடுத்துள்ளது? 98 கிராமங்களில் உள்ள மக்களை அப்புறப்படுத்திவிட்டு, அந்த நிலங்களையெல்லாம் என்ன செய்யப் போகின்றன மத்திய, மாநில அரசுகள்?’’ என்று சமூக ஆர்வலர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















