சாதியை காரணம் காட்டி இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்காத இளைஞர் - ஆட்சியருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வழக்கின் மீது நடவடிக்கை இல்லை எனவே வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கு
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவன் என்பதால் தன்னை இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்காததால் அது தொடர்பாக தொடர்ந்த வழக்கின் மீது நடவடிக்கை இல்லை எனவே வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி வழக்கில், மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரி சேர்ந்த மதிவாணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் தாக்கல் செய்த மனு.அதில், "கடந்த மார்ச் மாதம் தென்காசி மாவட்டம் ராயகிரி கிராமத்தில் நண்பரின் தந்தை இறந்த நிகழ்ச்சிக்கு எனது நண்பர்களுடன் சென்றேன். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பதால் அங்கிருந்த சிலர் என்னை மாற்று சமூகத்தினரின் இடத்திற்கு நீ எப்படி இங்கு வரலாம் என கூறி ஜாதியை கூறி திட்டினார்கள். மேலும் நான் அங்கு இருந்தால் இறந்தவரின் உடல் இறுதி சடங்கிற்கு யாரும் ஒத்துழைக்க மாட்டோம் என தெரிவித்தனர். அங்கிருந்து உடனடியாக நான் வெளியேற்றப்பட்டேன். அங்கு இருந்த வேறு சமூகத்தினர் உறவின்முறை நிர்வாகிகள் சோழராஜன், அம்மையப்பன், கார்த்திகேயன் உள்ளிட்ட சிலர் ஜாதியை கூறி அவமரியாதையாக திட்டினார்கள்.
மேலும், என்னை அழைத்துச் சென்ற நண்பர்களை மறுநாள் அழைத்து என்னை அழைத்ததால் அவர்களுக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லி உள்ளனர். மேலும் அவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டனர். இதுகுறித்து சிவகிரி காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். புகாரின் அடிப்படையில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை குற்றவாளிகளை கைது செய்யவும் இல்லை விசாரணையும் செய்யாமல் கிடப்பில் போட்டு விட்டனர். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சக்தி குமார் சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு
சென்னை போன்று மதுரையிலும் உயரிய குழந்தை நல மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு அமைக்க கோரிய வழக்கில், தமிழக சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க 2 வாரங்கள் இறுதி அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வெரோனிக்கா மேரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "2018 முதல் அக்டோபர் 2021 வரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 4,432 பிரசவங்கள், அறுவை சிகிச்சை மூலம் நடைபெற்றுள்ளன. அதில் 261 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதே காலகட்டத்தில் சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைகள் 45,241 பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலம் நடைபெற்ற நிலையில் 137 குழந்தைகள் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையை ஒப்பிடும் போது குழந்தைகள் இறப்பு விகிதம் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதற்கு போதுமான வசதிகள் இல்லாததே காரணம். சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில் மொத்தம் 226 உயிர்வேதி அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் நிலையில், மதுரையில் 86 உயிர்வேதி அறுவை சிகிச்சைகள் செய்வதற்கான வசதிகள் மட்டுமே உள்ளன.
சென்னை எக்மோர் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை துறையில், உள்ள வசதிகள் தமிழகத்தின் வேறு எந்த மருத்துவமனையிலும் இல்லை. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் மயக்கவியல் துறை நிபுணர்களும் குறைவாகவே உள்ளனர்.
தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உதவியாக உள்ளது. ஆகவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் 226 உயிர்வேதி அறுவை சிகிச்சைகள் செய்யும் வகையில் நவீன உபகரணங்களுடன் குழந்தைகள் நல மருத்துவமனையை அமைக்க உத்தரவிட வேண்டும். போதுமான எண்ணிக்கையில் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர்களையும், மயக்கவியல் துறை நிபுணர்களையும் நியமிக்கவும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக மாநில அளவிலான குழு அமைத்து ஆராய உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், இந்த மனு குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க 2 வாரங்கள் இறுதி அவகாசம் வழங்கி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.