Madurai High Court : கரூரில் இலங்கை அகதிகள் முகாம் அமைப்பதற்கு இடைக்கால தடை
தோரணக்கல்பட்டி பேருந்து நிலையம் அமைப்பதற்காக போடப்பட்ட பழைய அரசாணையை ரத்து செய்ய குறிப்பிடப்பட்டிருந்தது அதன் நிலை என்ன? - நீதிபதிகள் கேள்வி
கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘2014ஆம் ஆண்டு தோரணக்கல்பட்டி பகுதியில் இலங்கை அகதிகளுக்கு முகாம் அமைப்பதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் இதனை எதிர்த்ததால் அதை கைவிட்டு மீண்டும் கூடுதல் தனியார் பேருந்து நிலையம் அமைப்பதற்காக புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் இப்பகுதி இடத்தின் வகையை விவசாயத்தில் இருந்து வியாபாரம் சம்பந்தமான இடமாக மாற்றப்பட்டது.
இலங்கை அகதிகள் முகாம் அமைப்பதற்கு அரவக்குறிச்சி கூடலூர் கிராமத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் 2022ஆம் ஆண்டு தோரணக்கல்பட்டி பகுதியில் இலங்கை அகதிகளுக்கு முகாம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இலங்கை அகதிகள் முகாம் கட்டுவதற்கான 6 பேக்கேஜிங் டெண்டர் பிரிக்கப்பட்டு ஊரக வளர்ச்சி நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, தோரணக்கல்பட்டி பகுதியில் நிரந்தரமாக அமைய உள்ள இலங்கை அகதிகள் முகாம் அமைப்பதை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் இலங்கை அகதிகள் முகாமை அரவக்குறிச்சி தாலுகா கூடலூர் கிராமத்தில் அமைக்க உத்தரவு விட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதே தொடர்புடைய மற்றொரு வழக்கில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக போடப்பட்ட பழைய அரசாணையை ரத்து செய்ய குறிப்பிடப்பட்டிருந்தது அதன் நிலை என்ன? இலங்கை அகதிகள் முகாம் கட்டுவதற்கு 6 பேக்கேஜிங் டெண்டர் ஒரே ஒப்பந்ததாரருக்கு எவ்வாறு வழங்கப்பட்டது? இலங்கை அகதிகள் முகாம் கட்டுவதற்கான நிதி எங்கிருந்து பெறப்படுகிறது? என கேள்வி எழுப்பினார்.
அரசு தரப்பில், அரசாணை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் குறைந்த விலையில் ஒப்பந்தம் கேட்பவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இதற்கான நிதி தமிழக அரசு ஒதுக்கப்பட்ட ஊரக வளர்ச்சி நிதிமூலம் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து நீதிபதிகள், இலங்கை அகதிகள் முகாம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்தும், இப்பகுதியில் எந்த கட்டுமான பணிகள் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டார் மேலும் இலங்கை அகதிகள் முகாம் கட்டுவதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரரை இந்த வழக்கில் சேர்க்கவும், வழக்கு குறித்து பொதுப்பணித்துறை, மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர்கள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
மற்றொரு வழக்கு
வனப்பகுதிகளில் மரங்கள், வனவிலங்குகளின் எச்சங்கள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம், மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், வனப்பகுதிகளில் மரங்கள், வனவிலங்குகளின் எச்சங்கள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்கள் கடத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. சோதனை சாவடிகள், போலீஸ் நிலை இதே போல வனத்துறை அலுவலகங்கள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிரமாக வனப்பகுதிகளை கண்காணித்து வந்தால் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வரலாம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யஉத்தரவிட்டு விசாரணையை வழக்கை ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்