ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் திடீர் மாற்றம்! ரூ.25 கோடி யாருக்கு? அதிர்ஷ்டசாலி தெரிந்து கொள்ள காத்திருங்கள்!
ரூ.500 விலை கொண்ட இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசு ரூ.25 கோடி என்பதால் லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

கேரள ஓணம் பம்பர் லாட்டரி (Kerala Thiruvonam Bumper 2025) டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடைபெறுவதாக இருந்தது. ரூ.25 கோடி வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார்? என்பதை அறிந்து கொள்ள கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், திடீர் திருப்பமாக இன்று குலுக்கல் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் (செப்டம்பர் 27) இன்று நடைபெறுவதாக இருந்தது. இன்று பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் இந்த டிக்கெட் குலுக்கல் நடைபெறும் என்று கேரள லாட்டரித்துறை அறிவித்திருந்தது.கடந்த இரண்டு மாதங்களாக அனல் பறக்க டிக்கெட் விற்பனை நடைபெற்று வந்தது. ரூ.500 விலை கொண்ட இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசு ரூ.25 கோடி என்பதால் லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கேரளாவிற்கு செல்லும் தமிழ்நாடு, கர்நாடகா போன்ற வெளி மாநிலத்தவர்கள் சிலர் கூட லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியதை பார்க்க முடிந்தது.

வெளி மாநிலத்தவர்கள் சிலருக்கு அதிர்ஷ்டம் அடித்துவிடுவதால் அவர்களும் ஆர்வத்துடன் வாங்கினர். இப்படியாக கடந்த 2 மாதங்களாக அதிகமானோர் லாட்டரி கடைகளில் கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கி வந்தனர். இதுவரை 75 லட்சம் டிக்கெட்டுகளுக்கு மேல் ஏஜென்டுகளுக்கு விற்கப்பட்டதாக கேரள லாட்டரி துறை கூறியுள்ளது. அதிகபட்சமாக பாலக்காட்டில் 14 லட்சம் டிக்கெட்டுகளும், திருச்சூரில் 9.37 லட்சம் டிக்கெட்டுகளும் திருவனந்தபுரத்தில் 8.75 லட்சம் டிக்கெட்டுகளும் விற்றுள்ளன. இன்று பிற்பகல் நடைபெறும் குலுக்கலை கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த நிலையில், திடீர் திருப்பமாக குலுக்கல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லாட்டரி குலுக்கல் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என்று கேரள லாட்டரித்துறை அறிவித்துள்ளது. கனமழை மற்றும் ஜிஎஸ்டி வரி மாற்றம் காரணமாக விற்பனையில் சற்று தொய்வு ஏற்பட்டதால் குலுக்கல் தேதியை தள்ளி வைக்குமாறு கேரள லாட்டரி விற்பனையாளர்கள் மற்றும் ஏஜென்ட்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த முடிவை கேரள லாட்டரித்துறை அறிவித்துள்ளது. இதனால், இன்று அதிர்ஷ்ட எண்ணை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் இருந்த லாட்டரி பிரியர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே மிஞ்சியது. கேரள ஓணம் பம்பரில் ரூ. 25 கோடியை தட்டி தூக்க போகும் அதிர்ஷ்டசாலி யார் என்பதை அறிய லாட்டரி பிரியர்கள் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வரை இனி காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.25 கோடியும், இரண்டாவது பரிசாக 20 பேருக்கு தலா ரூ. 1 கோடியும், மூன்றாவது பரிசாக ரூ.50 லட்சம் 20 டிக்கெட்டுகளுக்கும் வழங்கப்படுகிறது. பரிசுத்தொகையில் 7 சதவீதம் ஏஜென்டு கமிஷனாகவும், 30 சதவீதம் வருமான வரியாகவும் என மொத்தம் 37 சதவீதம் பிடித்தது போக ஏனைய தொகை அதிர்ஷ்டசாலிக்கு கொடுக்கப்படும்.





















