கொடைக்கானல் : நிறம் மாறும் ரோஜா பூக்கள்.. குழந்தைகள் குதூகலம்.. குவியும் சுற்றுலா பயணிகள்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள நிறம் மாறும் ரோஜா பூக்களை சுற்றுலாபயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர் .
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடங்களில் மிக முக்கியமானது பிரையண்ட் பூங்கா. இந்த பூங்காவில் பல லட்சம் மலர்கள் நடவு செய்யப்பட்டு உள்ளது. இந்த மலர் நாற்றுக்கள் எதிர்வரும் மே மாதத்தில் பூத்துக் குலுங்கும் வகையில் நடப்பட்டுள்ளது. அவ்ப்போது வெளிநாடுகள், மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் மலர் நாற்றுக்கள் பிரையண்ட் பூங்காவில் நடப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சைனாவை பூர்வீகமாகக் கொண்ட மால்வேசிய குடும்ப வகையைச் சேர்ந்த நிறம் மாறும் ரோஜாக்கள் தற்போது பிரையன்ட் பூங்காவில் பூத்துள்ளது. ஹைபிஸ்கஸ் மட்டாப்ளீஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த மலர் செடி இரண்டு வண்ணங்களில் பூத்துள்ளது. இந்த நிறம் மாறும் ரோஜா பூக்கள் ஒரு செடியில் பல மலர்கள் பூக்கும். காலையில் வெண்மை நிறத்திலும், நண்பகலில் வெள்ளை நிற இளம் சிவப்பு நிறத்துடனும், மாலையில் இளம் சிவப்பு நிறத்துடன் நிறம் மாறிக்கொண்டே இருக்கும் .
இந்த அதிசய நிறம் மாறும் ரோஜா செடி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தற்போது பூத்துள்ளது . இந்த நிறம் மாறும் ரோஜாக்கள் கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் மட்டுமே வளரக்கூடியது. இந்த நிறம் மாறும் ரோஜாக்களை கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்குரிய நடவடிக்கைகளையும் பூங்கா நிர்வாகம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொடைக்கானலில் மீண்டும் தொடரும் உறைபனி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த மாதம் கடுமையான உறை பனி நிலவி வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக பனியின் தாக்கம் குறைந்து இருந்தது .இந்த வாரம் கொடைக்கானல் மலை பகுதியில் பகலில் கடும் வெயிலும் மாலை வேளையில் குளிரும் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இன்று மீண்டும் உறை பனி காணப்பட்டது . ஏரி சாலை, ஜிம்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனி படர்ந்து காணப்பட்டது .
மேலும் வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் கீழ் பதிவாகி உள்ளது. திடீரென மாறிய காலநிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. சுற்றுலாவை அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகள் வித்தியாசமான காலநிலையை ரசித்து வருகின்றனர். தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் ஜனவரி இறுதி மாதம் வரை மட்டுமே இருக்கும் உறை பனி தற்போது பிப்ரவரி மாதத்தில் நிலவி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்