கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடி பணி தீவிரம்
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தொடங்கிய இரண்டாம் போக நெல் விவசாய பணிகள் . எந்திர நடவிற்காக பாய் நாற்றங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக இரு போகம் நெல் விவசாயம் செய்யக்கூடிய ஒரே மாவட்டம் தேனி மாவட்டம். தமிழக கேரளா எல்லையை இணைக்கும் ஒரு முக்கிய மாவட்டமாக பார்க்கப்படுவது தேனி மாவட்டம். தேனி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விளங்குவது விவசாயம். இப்பகுதியில் நெல், தென்னை, திராட்சை, வாழை உள்ளிட்ட பயிர்களின் விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் காய்கறிகளின் உற்பத்தியும் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் விவசாயத்திற்கு உயிர்நாடியாக வழங்குகிறது முல்லைப் பெரியாறு அணை.
தற்போது முல்லைப்பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரித்தது தொடர்ந்து பருவ மழையும் அதிகமாக பெய்து வருவதால் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை செய்யப்படும் நெல் விவசாயத்தில் முதல் போக சாகுபடிக்கான அறுவடைகள் முடிந்து, தற்போது இரண்டாம் போக சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து பழனிசெட்டிபட்டிவரையில் சுமார் 14,707 ஏக்கர் பரப்பளவில் வருடத்திற்கு இரண்டு போகம் நெல் விவசாயம் செய்து வருவது வழக்கம். வருடத்தில் ஜூன் முதல் வாரத்தில் முதல் போக சாகுபடி செய்யப்பட்டு முதல்போக நெல் விவசாயத்திற்கான அறுவடை பணிகள் முடிந்த நிலையில் தற்போது இந்த பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கான நாற்று நடுதல் போன்ற பணிகளில் விவசாயிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணையில் போதுமான அளவு தண்ணீர் தற்போது உள்ள நிலையில் கம்பம் ,சுருளிப்பட்டி ,நாராயணதேவன் பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாற்றங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில எந்திர நடவிற்காக பாய் நாற்றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் கூறுகையில் பாய் நாற்றங்கால் அமைப்பதால் 50 சதவீதத்திற்கும் அதிகமாக விதைநெல்லை சேமிக்க முடியும் எனவும் தொழிலாளர்கள் பற்றாக்குறையை குறைக்கலாம் எனவும் மேலும் இந்த விவசாயம் சம்பந்தப்பட்ட சந்தேகங்கள் ஏதும் இருந்தால் கம்பம் வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்