எச். ராஜா பரபரப்பு பேட்டி: தமிழக தேர்தலில் பிரிவினைவாதிகளா? தேசியவாதிகளா? அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் பிரிவினைவாதிகளுக்கும், தேசியவாதிகளுக்கும் இடையே தான் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் போட்டி என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பாஜக சார்பாக முப்பெரும் விழா மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய எச்.ராஜா இந்தியாவிலேயே தமிழகம் தான் பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தமிழகத்தில் இந்த நிதி ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை 51 ஆயிரம் கோடி உள்ளது. ஸ்டாலின் முதலமைச்சராவதற்கு முன்பு தமிழகத்தின் கடன் 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது தற்போது ஐந்து ஆண்டுகளில் 9 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கும் என தவறான கண்ணோட்டத்தில் உள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபாராதனை குறித்து ஆய்வு செய்யும் தமிழக தொல்லியல் ஆர்வலர்கள் அங்கு இருக்கின்ற தர்காவில் ஆய்வு செய்வார்களா? பழனியில் முருகன் மாநாடு நடத்தியதற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து இன்று வரை அரசு அறிவிக்கவில்லை, இந்து கோயில்களில் திமுக அரசு கொள்ளை அடிக்கிறது. கடந்த 74 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ஆனால் ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி வருவாய் பற்றாக்குறை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக அரசு தமிழ்நாட்டில் காந்தி என்று எந்த ஒரு திட்டத்திற்காவது பெயர் வைத்துள்ளார்களா? எங்கு பார்த்தாலும் கருணாநிதி பெயர்தான் வைத்துள்ளார்கள். திமுக அரசு தமிழ் விரோதிகள் எனது நண்பர் சீமான் கூறிய கருத்துக்கு இந்த விஷயத்தில் நான் ஒத்துப் போகிறேன். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக என்ற பெயரில் தற்போது அரசு போக்குவரத்து கழகம் என்று வைத்துள்ள நிலையில் கருணாநிதி போக்குவரத்து கழகம் என பெயர் வைக்கப் போவதாக எனக்கு தகவல் வருகிறது. பிரிவினைவாதிகளுக்கும், தேசியவாதிகளுக்கும் இடையே தான் இந்த தேர்தலில் போட்டி. திராவிட கழகம் மற்றும் திமுக பிரிவினைவாதிகள் அவர்களுக்கும் தேசியவாதிகளுக்கும் தான் இந்த தேர்தலில் போட்டி என தெரிவித்தார்.





















