தேனி : ஆடி மாதத்திலும் ஆட்டம் காணும் பூ வியாபாரம்... விளைச்சல் இருந்தும் விவசாயத்தில் நட்டம்
பக்தர்களுக்கு சிறந்த மாதமாக விளங்கும் ஆடி மாதத்திலும் பூ வியாபாரம் கடுமையாக பாதித்துள்ளதாக வியாபாரிகள் வேதனை
ஆடி மாதம் இந்து மதத்தினருக்கு ஆன்மீக மாதமாகவே பார்க்கப்படுகிறது. ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி போன்றவை சிறப்பு நாளாக பார்க்கப்படுகிறது. ஆடிப்பிறப்பு என்பது தமிழ் இந்து மக்களால் ஆடி மாதம் முதலாம் நாள் கொண்டாடப்படும் ஒரு திருநாளாகும். ஆடி மாதம் தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கும் மாதமாகவும், அம்மனுக்கு உரிய மாதமாகவும் பார்க்கப்படுகிறது. ஆடி மாதத்தில் பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்தார் என்றும், பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. மேலும், ஆடி மாதத்தில் சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி அதிகமாக இருப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன.
ஆடி பிறப்பு தொடங்கி ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம் ஆகியன பண்டிகைகளாக அமைவதால் ஆடிமாதம் மேலும் சிறப்புப் பெறுகின்றது.
மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும், உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். இவ்வளவு சிறப்பு கொண்டுள்ளதால் இந்த மாதம் முழுவதும் பக்தர்கள் கோயில்களுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருப்பர். ஆடி மாதம் என்றால் பூஜை பொருட்கள் வியாபாரமும் பூ வியாபாரம் சூடுபிடிக்கும். ஆனால் தற்போது கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்ட மக்கள் கோயிலுக்கு கூட செல்ல முடியாமலும், நேரம் இல்லாமலும் இருந்து வருகின்றனர். தற்போது கொரோனா தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தாங்கள் இழந்த பொருளாதாரத்தை மீட்டு கொள்ளவும், தொழிலை மேம்படுத்தும் மும்முரத்திலும் உள்ளனர்.
இதனால் பெருவாரியான மக்களுக்கு கோயிலுக்குச் செல்ல நேரம் இல்லை என்று கூறலாம். இந்த நிலையில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமே நம்பி பிழைப்பு நடத்திவரும் பூ வியாபாரிகளுக்கு இது பெரும் அடியாக விழுந்து உள்ளது எனலாம். பூ விலை குறைந்து இருந்தாலும், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளதால், பூ வியாபாரம் இல்லாமல் மந்தமாக உள்ளது என்கின்றனர் பூ கடை உரிமையாளர்கள். தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் சின்னமனூர், சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக பூ விவசாயம் செய்யப்பட்டு சீலையம்பட்டி , கம்பம் பூ மார்க்கெட்டி பூக்கள் விற்கப்பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டிலிருந்து கேரளாவிற்கும் பூக்கள் அதிகமாக ஏற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பொதுமுடக்கத்தின் எதிரொலி பாதிப்பு தற்போதும் குறையாமல் இருந்து வருகிறது.
இதுகுறித்து பூ கடை உரிமையாளர்கள் கூறுகையில், "மல்லிகை கிலோ 300-க்கும் செண்டு பூ கிலோ 100 முதல் 110 வரை மட்டுமே விலை உள்ளது. இதனை நம்பி பூ வாங்கிப் போட்டாலும் வியாபாரம் நடத்துவதற்கான வழியில்லை. இன்றைய நிலைமையில், பூ வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆடி மாதத்தில் வியாபாரம் சூடு பிடிக்கும் என்று நினைத்த எங்களுக்கு வியாபாரம் மந்தமாக இருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது " என்றனர்.