தேனி: மழை எதிரொலியால் வைகை அணை உள்பட பல்வேறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது
தேனியில் பெய்த கனமழை எதிரொலியால் வைகை அணை உட்பட பல்வேறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சோத்துப்பாறை அணையில் மட்டும் ஒரே நாளில் 14 அடி வரையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்கள் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. இந்த நிலையில் அணையின் நீர் வரத்து ஒவ்வொரு அணைகளிலும் கனிசமாக உயரத்தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சலாறு அணை என அணைகளில் நீர்வரத்து அதிகரித்ததால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
குறிப்பாக பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை, அகமலை, சொக்கன் அலை, கொடைக்கானல் பேரீச்சம் உள்ளிட்ட வனப்பகுதியில் நேற்று பிற்பகல் முதல் கனமழை பெய்ய தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இரவிலும் கனமழை தொடர்ந்து பெய்ததால் சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்து அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 6 மணி முதல் படிப்படியாக உயர தொடங்கியது.
இந்நிலையில், அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.70 அடியாக இருந்தது நிலையில் ஒரே நாள் இரவில் அணையின் நீர்மட்டம் அதிகமாக 14 அடி வரையில் நீர் மட்டம் உயர்ந்தது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 83.93 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் அணையின் நீர்மட்டம் 83.93 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் தற்போது அணைக்கு நீர்வரத்து 155 கன அடியாக உள்ள நிலையில் குடிநீருக்காக 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 14 அடி உயர்ந்தது தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 63.94(71) ஆக உள்ளது, அணைக்கு நீர் வரத்தானது வினாடிக்கு 2470 கன அடியாக உள்ளது. அணையில் 4 ஆயிரத்து 398 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அதே போல முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டமானது 133(142) அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர் வரத்தானது 1274 கன அடியாக உள்ளது. நீர் நிரப்பானது 1800 கன அடியாக உள்ளது. அணைகளில் கடந்த சில தினங்களாக நீர் வரத்து துரிதமாக அதிகரிப்பதால் தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்