வெம்பக்கோட்டையில் சுடுமண் அகல்விளக்கு, கூம்பு வடிவ கிண்ணம், சதுரங்கம் ஆட்டக்காய் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை பகுதி தொன்மையான பொருட்கள், தொன்மையான மனிதர்களின் வாழ்விடப் பகுதியாக இருப்பதற்கான சான்றாக அமைந்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் அகல்விளக்கு, சுடுமண்னால் ஆன கூம்பு வடிவ கிண்ணத்தின் அடிப்பகுதி, சதுரங்கம் விளையாடும் ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2024- அகழாய்வுப் பணிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 18-ம் தேதி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியான கொந்தகை, விருதுநகர் மாவட்டம்- வெம்பக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர், திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம் மற்றும் கடலூர் மாவட்டம் - மருங்கூர் ஆகிய 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார்.
தமிழர் வரலாறு
தமிழ்நாடு 15 இலட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்றுத் தொன்மை கொண்ட நிலப்பரப்பாகும். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. கீழடி அகழாய்வு, தொல்லியலாளர்கள் இடையே மட்டுமின்றி உலகத் தமிழர்கள் இடையேயும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ச் சமூகமானது, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கரிமப் பகுப்பாய்வுகளின் முடிவுகள் வாயிலாக உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.
வெம்பக்கோட்டை அகழாய்வுப் பணி
வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் 3ம் கட்ட அகழாய்வு பணி கடந்த 18ம் தேதி முதல் துவங்கி நடைபெறுகிறது. முன்னதாக கண்ணாடி மணிகள் கல்மணிகள் மற்றும் பழங்கால செங்கற்கள், சிகை அலங்காரத்துடன் பாவையின் தலைப்பகுதி கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது உடைந்த நிலையில் அலங்கரிக்கப்பட்ட
சுடுமண் அகல்விளக்கு, சுடுமண்னால் ஆன கூம்பு வடிவ கிண்ணத்தின் அடிப்பகுதி, சதுரங்கம் விளையாடும் ஆட்டக்காய், சில்வட்டு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் அகழாய்வு தளத்தில் கிடைக்கப்பெறும் தொன்மையான பொருட்கள் தொன்மையான மனிதர்களின் வாழ்விடப் பகுதியாக இருப்பதற்கான சான்றாக அமைந்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Keezhadi Excavation: கீழடியில் "தா" என்ற தமிழி எழுத்து பொறிப்பு பானை ஓடு கண்டுபிடிப்பு !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Frank Duckworth: கிரிக்கெட் உலகில் தவிர்க்கமுடியாத டக்வர்த் லூயிஸ் முறை - கண்டுபிடித்த ஃப்ராங்க் டக்வர்த் காலமானார்