சாலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்துடன் சேர்க்கும் இளைஞர் குழுவினர்...!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிபவர்களை அடையாளம் கண்டு மீட்டு குடும்பத்தினருடன் சேர்க்கும் பணியில் ஈடுபடும் பசியில்லா வடமதுரை அமைப்பினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பசியில்லா வடமதுரை என்ற ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் சமூக ஆர்வம் கொண்ட 5 இளைஞர்கள் தினந்தோறும் ஆதரவற்ற நிலையில் தெருக்களிலும், சாலைகளிலும் சுற்றி திரிபவர்களுக்கு உணவு அளித்து பசியாற்றி வருகிறார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் மனநலம் பாதிக்கப்பட்டு பசிக்கு உணவு கேட்கதெரியாமல் சாலையோரங்களில் சுற்றுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு வழங்குவதோடு அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் யார் என்பதை விசாரித்து குடும்பத்தினருடன் சேர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல நாட்களாக முடி, தாடிகள் வளர்ந்து குளிக்காமல் ஊரை சுற்றும் ஆதரவற்றவர்களை குளிப்பாட்டுவது, சிகை அலங்காரம் செய்வது, புதிய ஆடைகளை வாங்கி கொடுப்பது உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு திசை தெரியாமல் சுற்றி வருபவர்களின் முகவரியை கண்டறிந்து அவர்களை குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டும் வருகின்றனர்.
அந்த வகையில் இதுவரை ஏறத்தாழ திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஆதரவற்றும், மனநிலை பாதிக்கப்பட்டும் சுற்றித் திரிந்த முப்பதுக்கு மேற்பட்டோரை அவர்களது உறவினர்களோடு சேர்த்து வைத்துள்ளனர். அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல், திருச்சி சாலையில் மனநலம் பாதிக்கப்பட்டு யாரிடமும் பேசாமல் ஊரடங்கு காலத்தில் பசி பட்டினியோடு சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை மீட்டு பசிக்கு உணவு கொடுத்ததோடு, அவரை பற்றிய தகவல்களை சேகரித்து தனது நண்பர்களுக்கு பேஸ்புக் மூலம் பகிர்ந்துள்ளார். இதை அவர்களது நண்பர்கள் பல்வேறு பகுதிகளுக்கும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதைப்பார்த்த கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள கங்கைகொண்டபுரம் கிராம பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் என்ற வாலிபரின் உறவினர்கள் பிரேம் குமாரை தொடர்புகொண்டு விபரத்தை கூறியுள்ளனர். அப்போதுதான் தெரிந்தது மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த அவர் ஒரு பட்டதாரி வாலிபர் என்றும் அவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நெய்வேலியில் இருந்து மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு முதலுதவி அளித்த குழுவினர் நெய்வேலிக்கு நேரில் அழைத்துச் சென்று அந்த வாலிபரை அவரது குடும்பத்தினருடன் ஒப்படைத்தார்.
இது போன்ற செயல்பாடுகள் குறித்து குழுவின் தலைவர் பிரேம் குமார் கூறும்போது பசியில்லா வடமதுரை என்ற அமைப்பை தொடங்கி ஏழை. எளிய ஆதரவற்றவர்களுக்கு பசிக்கு உணவு கொடுப்பதோடு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் வகையில் அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்பதை கண்டறிந்து சமூக வலைதள நண்பர்களுடன் பகிர்ந்து அவ்வாறு கண்டறியப்படும் அவர்களை மீண்டும் அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்து வருகிறோம். பலர் தங்களைப் பற்றி கூறுவது கிடையாது அவர்களது போக்கிலேயே சென்று பேச்சு கொடுத்து அவர்களை மீட்டு அவரது வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பது போன்ற பணிகளை செய்து வருவதாக கூறுகின்றனர். முகவரி கண்டறிய முடியாதவர்களை நண்பர்கள் உதவியுடன் மனநல காப்பகத்தில் சேர்த்து மருத்துவ உதவியும் செய்து வருகிறோம். அவ்வாறு மருத்துவ உதவியில் மீண்டவர்கள் பலர் உள்ளனர். இதுவரை திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிந்த ஏறத்தாழ 30க்கும் மேற்பட்டோர் அவர்களது வீடுகளுக்கு கொண்டு சென்று சேர்த்து இருக்கிறோம் என்று கூறினார்.