திண்டுக்கல்: பேகம்பூர் PFI அலுவலகத்தில் (NIA) தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் அதிரடி சோதனை
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கட்சி அலுவலகத்தில் (NIA) தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர்.
திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கட்சி அலுவலகத்தில் (NIA) தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கடந்த 2006 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு விசயங்களுக்கு குரல் கொடுக்கும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சிறுபான்மையினர் பிரிவில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு, இஸ்லாமியர் ஒடுக்குமுறை என இஸ்லாமியர்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு முன் நின்று வருகின்றனர். இந்த அமைப்பை தடைசெய்ய வேண்டும் என ஒரு சில அமைப்புகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மூலமாக குழுக்களை உருவாக்கி பல்வேறு பயிற்சிகளை அளித்துவருவதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் ஒன்றாக திண்டுக்கல் பேகம்பூர் முகமதியாபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் 3வது மாடியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்சி அலுவலகத்தில் இன்று அதிகாலை 3:30 மணி அளவில் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் 10 பேர் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
இதனால் கட்சி அலுவலகம் உள்ள முகமதிய புரத்தில் சாலையின் இரு பக்கமும் தடுப்புகளை ஏற்படுத்தி துப்பாக்கி ஏந்திய அதிவேக அதிரடிபடை மற்றும் திண்டுக்கல் காவல்துறையினர் உட்பட 200 மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தடுப்புகளை மீறி கட்சி அலுவலகம் செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்பொழுது தேசிய புலனாய்வு துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மூன்று மணி நேரம் சோதனை முடிந்து அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து கீழே இறங்கி வந்த போது அவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் பதட்டமான சூழ்நிலை நிலவியது 3 மணி நேர சோதனைக்கு பின்பு முக்கியமான ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.