Crime: திண்டுக்கல்லில் கள்ளக் காதலியின் தலையில் கல்லைப் போட்டு கொலை; தற்கொலைக்கு முயன்றவர் கைது
திண்டுக்கல்லில் கள்ளக் காதலியின் தலையில் கல்லை போட்டு கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்று சிகிச்சையில் இருந்த குற்றவாளியை திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் கள்ளக் காதலியின் தலையில் கல்லை போட்டு கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்று விஷம் அருந்தி சிகிச்சையில் இருந்த குற்றவாளியை திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே உள்ள மாலப்பட்டி அன்னை காமாட்சி நகரை சேர்ந்த முருகேசன் மனைவி செல்வராணி (வயது 45). இவர் தனது கணவர் இறந்து விட்டதால் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவருக்கு தனபால் மற்றும் சண்முகசுந்தரம் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகனான தனபால் திருமணமாகி கோவையில் தனியாக வசித்து வருகிறார். இளைய மகன் சண்முகசுந்தரம் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் செல்வராணிக்கும் குமரன் திருநகரை சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பு இருந்து வந்துள்ளது.
இருவரும் ஒன்றாகவே வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் இந்த விபரம் செல்வராணியின் மகன்களுக்கு தெரிய வரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் பிரபுவின் தொடர்பை செல்வராணி துண்டிக்க நினைத்தார்.அதன்படி அவருடன் பேசுவதை செல்வராணி குறைத்து இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி இருவரும் ஒரே இடத்திற்கு வேலைக்குச் சென்றனர். அப்போது பிரபு தனது காதலிக்கு உணவு வாங்கி வந்துள்ளார்.அதனை செல்வராணி சாப்பிட மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏன் என்று கேட்டபோது இனிமேல் தனக்கு எதுவும் வாங்கித் தர வேண்டாம் என்றும் தன்னுடன் பேசவும் வேண்டாம் என்றும் உறுதியாக செல்வராணி கூறியுள்ளார். இதனால் வேதனையடைந்த பிரபு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.அப்போது செல்வராணி அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் தனது வீட்டுக்கு வந்து விட்டார். இதனால் பிரபுவும் வீட்டுக்கு வந்து நீ என்னுடன் பேசாவிட்டால் நான் இறந்து விடுவேன் என்று கண்ணீர் மல்க கூறி உள்ளார்.
அதற்கு செல்வராணி, ’அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை இனிமேல் என் மகன்கள் சொல்வதைத்தான் நான் கேட்பேன்’ என்று சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரபு, நானே சாகப் போகிறேன் நீ மட்டும் எதற்காக உயிரோடு இருக்க வேண்டும்?’ எனக் கூறி அருகில் இருந்த குழவிக்கல்லை அவரது தலையில் போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தம் சரிந்த நிலையில் செல்வராணி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பிரபு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலாண்டி தலைமையிலான போலீசார் சிகிச்சையிலிருந்து வெளியே வந்த பிரபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















