Crime: 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. கைதான 59 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை..!
10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் ராமநாதன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 59). கூலித்தொழிலாளி. கடந்த 2020-ம் ஆண்டு இவர், 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் ஆய்வாளர் கவிதா, சிறப்பு சார்பு ஆய்வாளர் கற்பகவள்ளி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, ராமராஜ் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி இந்த வழக்கை நடத்தி வந்தார். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட ராமராஜூக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார்.
மற்றொரு செய்தி:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சின்ன அழகு என்ற நல்லியப்பன் (வயது 45). விவசாயி. இவருடைய மனைவிக்கும், பக்கத்து வீட்டுக்காரரான துரைப்பாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த சின்ன அழகு மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த அவருடைய மனைவி, கணவரை பிரிந்து தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.
தனது மனைவி பிரிந்து சென்றதற்கு துரைப்பாண்டி தான் காரணம் என்று நினைத்த சின்ன அழகு, கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந்தேதி, மதுபானம் குடிக்கலாம் என துரைப்பாண்டிக்கு ஆசைவார்த்தை கூறி நத்தம் அருகே துவாரபதி மலைப்பகுதிக்கு அழைத்துச்சென்றார். பின்னர் மதுபோதையில் இருந்த துரைப்பாண்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ன அழகுவை கைது செய்தனர். மேலும் அவர் மீது திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் சூசை ராபர்ட் ஆஜராகி வந்தார்.
பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட சின்ன அழகுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரவணன் உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்