(Source: ECI/ABP News/ABP Majha)
நம்பர் 1 காஞ்சிபுரம்.. காஞ்சியை எதிர்பார்க்கும் உலக நாடுகள்.. சாதித்து காட்டியது என்ன ?
Kanchipuram: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏற்றுமதியில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் இருக்கக்கூடிய ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம் உள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறு குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. வெளிநாடுகளை சேர்ந்த தொழிற்சாலைகளும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் எப்போதுமே, பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னணி மாவட்டமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடப்பாண்டில், 1.92 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காஞ்சிபுரம், சென்னை, திருப்பூர், கோவை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் முதல் ஏழு இடங்களை பிடித்துள்ளன.
சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்கள்
அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் 68,666 கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்து முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. சென்னை 22891 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. திருப்பூர் மாவட்டம் 16,371 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், கோவை மாவட்டம் 11,442 கோடி மதிப்பிலான பொருட்கள், திருவள்ளூர் மாவட்டம் 11, 083 கோடி மதிப்பிலான பொருட்கள், கிருஷ்ணகிரி 9659 கோடி மதிப்பிலான பொருட்கள், வேலூர் மாவட்டம் 3854 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை ,திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள் மோட்டார் வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், எலக்ட்ரிக் சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்கின்றன. குறிப்பாக இந்த நிறுவனங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ,சிங்கப்பூர் ,ஜப்பான், பிரான்ச், இலங்கை , நெதர்லாந்து என உலகில் பல்வேறு நாடுகளுக்கு தங்களின் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கின்றன.
இந்திய அளவில் ஏற்றுமதியில் குஜராத் முதலிடத்திலும் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த முழு நிதியாண்டில் தமிழ்நாட்டில் மற்றும் சுமார் 3.61 லட்சம் கோடி ரூபாய் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன ?
தொலைத்தொடர்பு கருவிகள், பருத்தி ஆடைகள், மோட்டார் வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள், எலக்ட்ரிக் இயந்திரங்கள், பால் இந்திரங்கள், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இந்திரங்கள் ஆகியவை அதிக ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களாக உள்ளன.