ஸ்ரீபெரும்புதூர் இருமல் மருந்து: 16 குழந்தைகளின் மரணம்! விஷம் கலந்ததா? அதிர்ச்சி தரும் ஆய்வு அறிக்கை
"காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் மருந்து ஆலையில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது"

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும், ஸ்ரீசன் ஃபார்மா மருந்து உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து, அந்நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
கோல்ட்ரிஃப் இருமல் மருந்து
காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் எனும் இருமல் மருந்தை உட்கொண்டதால் மத்தியபிரதேசத்தில் 14 மற்றும் ராஜஸ்தானில் 2 என மொத்தம் 16 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. தேசிய அளவில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளது. இதையடுத்து ஆலையின் செயல்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு, 26 பக்கங்களை கொண்ட அறிக்கையை மத்திய அரசுக்கு தாக்கல் செய்துள்ளது. அதில், ஸ்ரேசன் நிறுவனம் கடுமையான விதிமீறல்களில் ஈடுபட்டதோடு, சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
350 விதிமீறல்கள் என அறிக்கை
தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை நடத்திய ஆய்வில், மருந்து உற்பத்தி செயல்பாட்டில் 350க்கும் மேற்பட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அந்த விதி மீறல்களை முக்கியமானவை மற்றும் பெரியவை என அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர்.
நிறுவனத்தில் அடிப்படை வசதிகள், தகுதிவாய்ந்த ஊழியர்கள் மற்றும் தயாரிப்பு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சரியான நடைமுறைகள் இல்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மோசமான தொழிற்சாலை
தமிழக அரசின் அறிக்கையின்படி, ”குறிப்பிட்ட இருமல் மருந்தானது தொழிற்சாலை வளாகத்தில் சுகாதாரமற்ற முறையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. காற்றை கையாள்வதற்கான வசதிகள் இல்லை. மோசமான வெண்டிலேஷன், பாதிக்கப்பட்ட அல்லது துருப்பிடித்த உபகரணங்கள் இருந்துள்ளன. ஆலை அமைப்பு மற்றும் வடிவமைப்பு ஆகியவை இயல்பாகவே மாசுபாட்டின் அபாயங்களுக்கு பங்களித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷத்தை மருந்தாக்கிய நிறுவனம்
இந்த நிறுவனம் டைஎதிலீன் கிளைக்கால் ( Diethylene glycol (DEG)) என தடை செய்யப்பட்ட வேதிப்பொருள் இந்த மருந்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்த மருந்தில் 48 சதவித்திற்க்கு மேல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மருந்தே கிடையாது இது விஷம் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேதிப்பொருள் பெயிண்ட் தயாரிக்கவும், பிரேக் ஆயில் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பொருள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருந்தில் இந்த வேதிப்பொருள் கலக்கவே கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூலப்பொருட்கள் சோதனை அல்லது விற்பனையாளர் ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டதையும், பாதகமான எதிர்வினைகளைக் கண்காணிக்க எந்த மருந்தக கண்காணிப்பு அமைப்பும் ஆலையில் இல்லை என்பதையும் ஆய்வுக் குழு கண்டறிந்தது. திறந்தவெளி சூழல்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டதால் மாசுபடுவது தவிர்க்க முடியாததாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, காஞ்சிபுரம் மண்டல மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி மணிமேகலை, ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, விளக்கம் கோரி நிறுவனத்தின் நுழைவாயிலில் நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த நிறுவனத்தில் பல்வேறு விதிமீறல்கள் மீறப்பட்டிருப்பது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.





















