காஞ்சிபுரத்திற்கு தீரும் தலைவலி.. 100 கோடி ரூபாயில் செவிலிமேடு பாலாறு பாலம்.. !
Kanchipuram Palar Bridge: காஞ்சிபுரத்தில் செவிலிமேடு பகுதியில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு பகுதியில், 900 மீட்டர் தூரத்திற்கு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை இறங்கியுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன.
உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் நகரம்
காஞ்சிபுரம் மாநகரம் பட்டு சேலை மற்றும் கோவிலுக்கு உலக அளவில் பிரசித்தி பெற்ற நகரமாக இருந்து வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றாகவும் காஞ்சிபுரம் இருந்து வருகிறது. அதேபோன்று காஞ்சிபுரத்தை சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு வேலை வாய்ப்புகள் நிறைந்திருப்பதால், நாள்தோறும் ஒரு லட்சம் வெளியூர் மக்கள் படையெடுத்து வருகின்றனர். காஞ்சிபுரத்திற்கு ஆன்மீக சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து நெரிசலில் காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகரம் அதிக அளவு வெளியூர் பொதுமக்களால், போக்குவரத்து நெரிசலால் தவித்து வருகிறது. காஞ்சிபுரம் நகரம் மற்றும் காஞ்சிபுரம் நகரத்தில் உள்பகுதிகளிலும், இந்த போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் பாலாறு அமைந்துள்ளது. இந்தப் பாலாற்றின் குறுக்கே, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. செவிலிமேடு பாலாறு பாலம் வழியாக நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள், சென்று வருகின்றன. செவிலிமேடு பாலாறு பாலம் வழியாக வந்தவாசி, திண்டிவனம், பாண்டிச்சேரி, விழுப்புரம், சேத்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்தப் பாலத்தின் வழியாக சென்று வருகின்றனர்.
சேதமடைந்த செவிலிமேடு பாலம்
அதிகளவு கனரக வாகனங்கள் இந்த பாலத்தின் மீது செல்வதால், பாலம் படிப்படியாக சேதம் அடைந்து, வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தொடர்ந்து இந்த பகுதிகளில் அவ்வப்போது விபத்து ஏற்படுவது, காவல்துறை மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தலைவலியாக மாறி வருகிறது. இது மட்டுமில்லாமல் பாலம் பல்வேறு இடங்களில் சேதம் அடைந்து இருப்பதால், பாலத்தின் மீது வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டிய சூழலும் உள்ளன.
இதனால் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என காஞ்சிபுரம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து புதிய உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான நடவடிக்கையில் நெடுஞ்சாலைத்துறை இறங்கியது.
புதிய செவிலிமேடு பாலம்
செவிலிமேடு பாலாறு குறுக்கே புஞ்சைஅரசன்தாங்கல் பகுதியிலிருந்து, செவிலிமேடு வரை, சுமார் 900 மீட்டர் நீளத்திற்கு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செவிலிமேடு, உயர்மட்ட மேம்பாலம் அமைய உள்ளது. பாலத்தின் அகலம் 7.5 மீட்டராக இருக்கும்.
பாலம் கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகள் நடைபெற்ற முடிந்துள்ளன. இதனைத் தொடர்ந்து மண் பரிசோதனை செய்யப்பட்டது. மண் பரிசோதனை முடிவடைந்து அதற்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பாலத்தின் திட்ட மதிப்பீடு, பாலம் அமைப்பதற்கான வரைபடம், பாலம் அமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னேற்பாடு பணிகள் நடைபெற்ற முடிந்தவுடன், நிதி ஒதுக்கப்பட்டு பாலம் கட்டும் பணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல் குறையும்
செவிலிமேடு பகுதியில் புதிய பாலம் அமைக்கப்பட்டால், காஞ்சிபுரம் நகரத்திற்கு வருவதற்கு ஒரு பாலம், காஞ்சிபுரம் நகரத்திலிருந்து வெளியேறுவதற்கு ஒரு பாலம் என இரட்டை பாலம் அமையும். இதன்மூலம் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறையும். அதேபோன்று, காஞ்சிபுரம் முதல் வந்தவாசி வரை நான்கு வழி சாலை அமைக்கப்பட உள்ளதால், காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசிக்கு செல்வதற்கான பயணம் நேரமும் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















