உதயநிதியை சந்தித்த அதிமுக பிரமுகர்.. தொடரும் காஞ்சிபுரம் மாநகராட்சி பஞ்சாயத்து - நடந்தது என்ன?
காஞ்சிபுரம் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் திமுகவில் இணைந்ததாக, தகவல் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிராக தொடர்ந்து பிரச்சினை நடைபெற்ற வரும் நிலையில், அதிமுக கவுன்சிலர் கணவர், திமுக அமைச்சர்களை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது
காஞ்சிபுரம் மாநகராட்சி
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், கடந்த 2022 ஆம் ஆண்டு, நடைபெற்றது. மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 32 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 33 வார்டுகளில் வெற்றி பெற்று, திமுக கூட்டணி காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியது. அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், பாஜக 1 வார்டிலும், பிற இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தனர். சுயேட்சைகள் பலரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தொடரும் மேயர் பிரச்சனை
மேயர் தேர்தலில் மகாலட்சுமி யுவராஜ் காஞ்சிபுரத்தில் முதல் மேயராக பதவி ஏற்றார். துணை மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரகுருநாதன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். என்னதான் பெரும்பான்மையை நிரூபித்து காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி பொறுப்பேற்று இருந்தாலும், சில மாதங்களிலேயே கவுன்சிலர்களால் பிரச்சனை எழத் துவங்கியது. சமீபத்தில் மேயருக்கு எதிராக நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானம், தோல்வியில் முடிந்துள்ளது.
அதிமுக கவுன்சிலர் அகிலா தேவதாஸ்
தொடர்ந்து 33 கவுன்சிலர்கள் தொடர்ந்து மேயர் தரப்புக்கு எதிராக இருந்து வருகின்றனர். இதில் 7 அதிமுக கவுன்சிலர்களும் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தரப்பிற்கு எதிராக உள்ளனர். இதில் அதிமுகவின் இருபதாவது வார்டு கவுன்சிலர் அகிலா தேவதாஸ் மேயருக்கு எதிராகவே இருந்து வருகிறார். இந்தநிலையில் அகிலா தேவதாஸ் கணவர் தேவதாஸ் திமுகவில் இணைந்து விட்டதாக காஞ்சிபுரத்தில், தகவல்கள் பரவி வருவது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
whatsapp குழுக்களில் பரவிய தகவல்...
நேற்று முதல் காஞ்சிபுரம் உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்களில் கவுன்சிலரின் கணவர் தேவதாஸ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகிய இருவரையும் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்துடன் "எதிர்காலம் வரும் என் கடமை வரும், இந்த காக்கையின் கூட்டத்தை ஒழிப்பேன், பொது நீதியிலே புது பாதையிலே, வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்" என்ற வாசகமும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. மேயர் தரப்பு தற்பொழுது தொடர்ந்து கவுன்சிலர்களிடம், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதிமுக கவுன்சிலர் திமுக அமைச்சர்களை சந்தித்தது பேசு பொருளாக மாறி உள்ளது. மேயர் தரப்புக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளாரா ? என்ற கோணத்திலும் தகவல்கள் பரவியிருந்தது.
தேவதாஸ் சொல்வது என்ன ?
தற்பொழுது திமுக அமைச்சர்களை சந்தித்துள்ள தேவதாஸ் மாவட்ட இளைஞரணி இணை செயலாளராகவும், 20-வது வட்டச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த புகைப்படத்தை குறித்து ஏபிபி நாடு சார்பில் , தேவதாஸிடம் தொடர்பு கொண்டு பேசினோம் : உறவினர் ஒருவர் அழைப்பின் பெயரில் திருமண பத்திரிகை வைப்பதற்காக, அமைச்சர்களை சந்தித்தது உண்மைதான். இன்றைய சூழலில் அரசியல் திருமணம் போன்ற நிகழ்ச்சியின் பொழுது பிற கட்சியை சேர்ந்தவர்களுக்கு, பத்திரிகையை வைப்பது சகஜம்தான். நேற்று கூட தமிழ்நாடு முதலமைச்சர் ராஜ்நாத்சிங் அருகில் அமர்ந்திருந்தார், அதை வைத்து பாஜக - திமுக கூட்டணி என்று சொல்லிவிடலாமா ? என கேள்வி எழுப்பினார்.
நீங்கள் சொல்வது போல் இல்லை...
தான் தற்பொழுது அதிமுகவில் தான் இருப்பதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், ஒரு சிலர் அரசியல் ஆதாயத்திற்காகவும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள் என தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில், முன்னாள் அமைச்சர் மாவட்டச் செயலாளர் வி. சோமசுந்தரம் வழியில் அதிமுகவில் பயணித்து வருவதாக தெரிவித்தார். மேலும் இன்று காலை கூட அதிமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் அவர்களை சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாகவும் தெரிவிக்கிறார் தேவதாஸ்.
தற்பொழுது, அதிமுகவில் இருப்பதை தேவதாஸ் நம்மிடம் உறுதி செய்துள்ளார். ஆனால் காஞ்சிபுரம் மாநகராட்சி தொடர்ந்து பரபரப்பாக இருக்கும் நிலையில், அமைச்சரை அதிமுக கவுன்சிலர் சந்தித்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை பொறுத்திருந்து பார்ப்போம்.