ராணுவத் துறையில் புதிய மைல்கல்!ரேடார், ட்ரோன், ஜாமர் சோதனை மையம் ! திரும்பி பார்க்க வைத்த காஞ்சிபுரம்!
காஞ்சிபுரத்தில் 136 கோடி மதிப்பீட்டில், மூன்று இடங்களில் ராணுவ சோதனை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மயங்களில் ட்ரோன், ரேடார் மற்றும் ஜாமர் போன்ற கருவிகள் சோதனை செய்யப்படும்.

தமிழக அரசு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு விண்வெளி மற்றும் ராணுவ தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையை கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கியது.
இதன் மூலம் பல்வேறு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. மேலும் அடுத்த பத்து ஆண்டுகளில் இதன் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்க முடியும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
ராணுவ முதலீடுகளை ஈர்க்கும் தமிழ்நாடு
அதன் ஒரு பகுதியாக திருச்சியில் ராணுவத் துறைக்கான சோதனை மையம் உருவாக்கப்பட்டு வருகிறது. இங்கு ராணுவத்துறைக்கான உலோகவியல் மற்றும் இயதிரத்திற்கான சோதனை மையம் கட்டுமான பணிகளை 'டிட்கோ' துவங்கி இருக்கிறது. மேலும் காஞ்சிபுரத்தில் மூன்று ராணுவ சோதனை மையங்கள் அமைய உள்ளன. தமிழகத்தில் நான்கு இடங்களில் ராணுவ சோதனை மையம் அமைய உள்ளது. ஒவ்வொரு திட்டத்திற்கும் 75% நிதியை மத்திய அரசு வழங்குகிறது. மீதமுள்ள நிதியை தமிழக அரசு மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து செலவு செய்கின்றன.
இந்திய அளவில் கவனம் காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம்-வடகால் சிப்காட் பகுதியில் ஆளில்லா விமான தொழிலுக்கான பொது சோதனை மையம் சுமார் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகளை தமிழக அரசின் டிட்கோ நிறுவனம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அமைக்கிறது.
இதேபோன்று இரண்டாவதாக, மின்னணு போர் முறை காண சோதனை மையம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. மூன்றாவது சோதனை மையம் மின்னணு ஒளியியல் பொது சோதனை மையம் 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது.
டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு வரும் சோதனை மையங்கள்
இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து இந்த சோதனை மையங்கள் மூலம், ட்ரோன், ரேடார் மற்றும் ஜாமர் போன்ற கருவிகளை சோதனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலோகவியல் சோதனை மையத்தில் உதிரி பாகங்களின் தரம் உள்ளிட்டவற்றை சோதனை செய்ய முடியும்.
உலோகவியல் சோதனை மையம் அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மூன்று சோதனை மையங்களும் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகம் ராணுவ துறையில் மேலும் புதிய முதலீடுகள் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















