காஞ்சிபுரம் பட்டு புடவைக்கு 2 விருதுகள்! திரும்பிப் பார்த்த இந்தியா! சாதித்த காஞ்சி நெசவாளர்!
"காஞ்சிபுரத்தை சேர்ந்த பட்டு நெசவாளர் ராஜசேகர், மத்திய மற்றும் மாநில அரசின் 2 விருதுகளை பெற்று அசத்தியுள்ளார்"

"மத்திய அரசின் ஜவுளி துறையால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய விருதுக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளர் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்"
பட்டுக்குப் புகழ்பெற்ற "காஞ்சிபுரம்"
காஞ்சிபுரம் கோவில் நகரமாக பார்க்கப்படுகிறது. மேலும் காஞ்சிபுரம் கைத்தறி பட்டு நெசவாளர்களுக்கு புகழ்பெற்ற நகரமாகவும் இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் பட்டுப் புடவைகளுக்கு, இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வரவேற்பு கிடைக்கிறது.
காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் புடவைகள் தென்னிந்தியாவின் பாரம்பரியம், கலை மற்றும் கலாச்சாரத்தில் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது. திருமணங்களுக்கு காஞ்சிபுரம் பட்டு புடவைகள் எடுப்பது, பாரம்பரியமாக இருந்து வருகிறது.
தேசிய கைத்தறி தினம்
இந்தியாவில் தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கைத்தறி தினம் கொண்டாடும் நாள் அன்று, மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் கைத்தறி நெசவாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகள் வழங்கி நெசவாளர்கள் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு காஞ்சிபுரத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு, நெசவாளர்களுக்கான மத்திய அரசின் தேசிய விருது கிடைத்திருக்கிறது. டெல்லியில் நாளை நடைபெற உள்ள விழாவில் அவருக்கு மத்திய அரசு விருது வழங்கப்பட உள்ளது.
யார் இந்த ராஜசேகர்?
காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (41). இவர் கைத்தறி நெசவாளராக, காஞ்சிபுரம் பாரம்பரிய பட்டு ரகங்களை உற்பத்தி செய்து வருகிறார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் பட்டுக் கூட்டுறவு கைத்தறி சங்கத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது கோர்வை ரக பட்டு சேலைக்கு, மத்திய அரசின் நெசவாளர்கள் சேவை மையத்தின் அதிகாரிகள் விருதுக்கு பரிந்துரை செய்தனர். இதன் அடிப்படையில் மத்திய அரசின் நெசவாளர் விருது ராஜசேகருக்கு கிடைக்க உள்ளது.
பட்டுப்புடவையின் சிறப்பம்சம் என்ன ?
பாரம்பரிய பட்டு சேலையாக இந்த பட்டு சேலையை ராஜசேகர் தயாரித்துள்ளார். இந்தப் பட்டு சேலை கோர்வை ரகப்பட்டு சேலையாக இருக்கிறது. ஒரு பக்கம் கரையைக் கொண்ட கோர்வை ரகமாகவும் இந்த சேலை உள்ளது. முந்தானைப் பகுதியில் இரண்டு தலை அன்னம் மற்றும் பறக்கும் குதிரை ஆகியவை இடம்பெற்றுள்ளன. அடர் நீல நிறத்தில் கரைகளும், புடவையின் நிறம் நீல நிறத்திலும் நெய்யப்பட்டுள்ளது. இந்த செயலை பாரம்பரிய முறைப்படி, முழுக்க முழுக்க கையால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு விருதுகளைப் பெற்ற ராஜசேகர்
மத்திய அரசின் நெசவாளர் விருது மட்டுமில்லாமல் மாநில அரசின், சிறந்த வடிவமைப்பதற்கான விருதையும் இந்த புடவை பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரே புடவைக்கு மத்திய மற்றும் மாநில அரசின் இரண்டு விருதுகளை பெற்றுள்ளார் ராஜசேகர்.
இதுகுறித்து ராஜசேகர் கூறுகையில், சாதாரண புடவைகளை கைத்தடியில் உருவாக்க 6 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும். பாரம்பரிய ரகம் என்பதால் இந்த புடவையை செய்வதற்கு 20 நாட்கள் வரை எடுத்துக் கொண்டது. இந்த சேலையை தயாரிக்கும் போது ஒவ்வொரு நொடியும் முக்கியமானது, பார்த்து பார்த்து இந்த சேலையை செய்ததாக பெருமையுடன் தெரிவித்தார். மேலும் கூறுகையில், தனக்கு காஞ்சிபுரம் பட்டு கைத்தறி சங்கத்தை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், அவர்களின் உதவியால் தான் இந்த சாதனை செய்ய முடிந்ததாகவும் தெரிவித்தார்.






















