பாஜக அடக்குமுறை, அதிமுக அடிமை: காஞ்சிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு!
"காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை, உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துப் பேசினார்"

"காஞ்சிபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்"
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி
காஞ்சிபுரத்தில் இன்று ஒரு நாள் பயணமாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திமுக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன் ஒரு பகுதியில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 17 துறைகளைச் சேர்ந்த 4997 பயனாளிகளுக்கு ரூ.253 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில், 3846 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதோடு, புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களும் திறந்து வைக்கப்பட்டன. மேலும், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. முன்னதாக காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில், அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதிமுக மற்றும் பாஜகவை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "மத்திய பாஜக அரசின் அடையாளம் அடக்குமுறை; அதிமுகவின் அடையாளம் அடிமைத்தனம்; ஆனால், திமுக அரசுதான் சமூக நீதிக்கான அரசு" என்று குறிப்பிட்டார்.
திமுக அரசின் முக்கிய திட்டங்களான மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகள் செல்லம் திட்டம், மற்றும் காலை உணவு திட்டம் ஆகியவற்றின் சாதனைகளை அவர் பட்டியலிட்டார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன்பெறுவதாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 73 ஆயிரம் பெண்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் மனு அளித்த பெண்களுக்கு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கலைஞர் உரிமைத்தொகை திட்டம் விரைவில் வழங்கப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார். இறுதியாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.





















