"டீ நல்லா இருக்கு" பற்றி எரியும் முர்ஷிதாபாத்.. உள்ளூர் எம்பி யூசுப் பதான் பதிவால் காண்டான மக்கள்
முர்ஷிதாபாத்தில் பெரும் கலவரம் வெடித்துள்ள நிலையில், உள்ளூர் எம்பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யூசுப் பதான், இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு அந்த தொகுதி மக்களை பெரும் கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. அழகான மாலைப்பொழுதில் அமைதியான சூழலில் நல்ல டீ குடிப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்குவங்கம் மாநிலம் முர்ஷிதாபாத்தில் பெரும் கலவரம் வெடித்துள்ள நிலையில், உள்ளூர் எம்பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யூசுப் பதான், இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு அந்த தொகுதி மக்களை பெரும் கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. அழகான மாலைப்பொழுதில் அமைதியான சூழலில் நல்ல டீ குடிப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
பற்றி எரியும் முர்ஷிதாபாத்:
பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, சட்டமாகியுள்ளது. இஸ்லாமிய முறைப்படி அல்லாவின் பெயரில் நன்கொடையாக வழங்கப்படும் சொத்துகளே வக்பு என அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள இந்த வக்பு சொத்துகளை வக்பு வாரியம்தான் நிர்வாகிக்கின்றன.
இந்த சூழலில், வக்பு வாரியங்களின் தன்னாட்சியில் கை வைக்கும் வகையில் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் மேற்கொண்டு வருகின்றன. இதை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும் போராட்டம் வெடித்து வருகிறது.
குறிப்பாக, மேற்குவங்கம் மாநிலம் முர்ஷிதாபாத்தில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த வன்முறையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 150க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்துள்ளது.
யூசுப் பதான் மீது காண்டான மக்கள்:
வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய படைகளை களமிறக்கும்படி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக மாறி இருக்கிறது. முர்ஷிதாபாத் மட்டும் அல்லாமல் மால்டா, சவுத் 24 பர்கானாஸ் மாவட்டங்களிலும் வன்முறை வெடித்துள்ளது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மத்திய படைகள் மீது கல்வி வீச்சு நடத்தப்பட்டுள்ளது.
இம்மாதிரியான சூழலில், உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதான், இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை பெரும் கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. யூசுப் பதான், பஹரம்பூர் மக்களவை உறுப்பினராக உள்ளார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகள், பஹரம்பூர் தொகுதியின் கீழ் வராவிட்டாலும் அவரின் தொகுதியின் அருகில் உள்ள பகுதிகளில் கலவரம் ஏற்பட்டுள்ளது. முர்ஷிதாபாத் மாவட்டத்திலும் அதன் சுற்றியுள்ள பகுதிகளும் பற்றி எரியும் நிலையில், அழகான மாலைப்பொழுதில் அமைதியான சூழலில் நல்ல டீ குடிப்பதாக யூசுப் பதான் பதிவிட்டுள்ளார்.
வன்முறை காரணமாக முர்ஷிதாபாத் பதற்றமடைந்திருக்கும் நேரத்தில், இப்படிப்பட்ட பதிவு போட்டதற்காக யூசுப் பதானை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். "உங்களுக்கு கொஞ்சமாவது வெட்கம் இருக்கிறதா?" என இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தை முன்வைத்து யூசுப் பதானை பாஜக கடுமையாக சாடி வருகிறது. மாநில அரசின் ஆதரவோடு வன்முறை நடப்பதாக மம்தா பானர்ஜி அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளது. "மேற்குவங்கம் பற்றி எரிகிறது. கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது எனக் கூறி, மத்திய படைகளை அனுப்பியுள்ளது உயர் நீதிமன்றம்.
View this post on Instagram
காவல்துறை அமைதியாக இருக்கும் போது மம்தா பானர்ஜி அரசு இதுபோன்று வன்முறை சம்பவங்களை ஊக்குவிக்கிறது. இந்துக்கள் படுகொலை செய்யப்படும் நேரத்தில் எம்பி யூசுப் பதான் தேநீர் அருந்திவிட்டு அந்த தருணத்தில் மூழ்குகிறார். இதுதான் திரிணாமுல்" என்று பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.





















