Wrestlers Protest: 'பதக்கத்தை தூக்கிப்போட்டா மட்டும்.. என்னை தூக்குல போட்டுட மாட்டாங்க..’ பிரிஜ் பூஷன் பேச்சு..!
மல்யுத்த வீரர்கள் கங்கையில் பதக்கங்களை வீசுவதால் மட்டும் என்னை தூக்கிலிட மாட்டார்கள் என குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், அன்ஷூ மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட பல மல்யுத்த வீரர்கள் கைசர்கஜ்ச் எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் தொல்லை மற்றும் உடல்ரீதியான துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.
பஜ்ரங் புனியா, வினேஷ் போகர் மற்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பல மல்யுத்த வீரர்கள், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
கிட்டதட்ட 5 மாதங்கள் மேல் ஆகியும் குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்று, மல்யுத்த வீரர்கள் நேற்று தாங்கள் இதுவரை ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசுவதற்காக நடைபயணம் மேற்கொண்டனர். அப்போது, அங்கே வந்த விவசாய தலைவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி வீசுவதற்காக வைக்கப்பட்ட பதக்கங்களை பெற்றுகொண்டு 5 நாள் அவகாசம் கேட்டனர். இதனால் நேற்றைய போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்தநிலையில், இந்த போராட்டம் குறித்து பிரிஜ் பூஷன் இன்று செய்தியாளர்கள் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மல்யுத்த வீரர்கள் கங்கையில் பதக்கங்களை வீசுவதால் மட்டும் என்னை தூக்கிலிட மாட்டார்கள். என் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட முதல் நாளில் இருந்து, அது எப்போது நடந்தது, எங்கே நடந்தது, யாருடன் நடந்தது என்று கேட்டு வருகிறேன். யாரும் பதிலளிக்கவில்லை. என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் தூக்கில் தொங்குவேன்.
உங்களிடம் ஆதாரம் இருந்தால் போய் காவல்துறையினரிடம் கொடுங்கள், நீதிமன்றத்தில் கொடுங்கள். அப்போது நான் குற்றவாளி என அறிவித்து நீதிமன்றம் என்னை தூக்கில் போடட்டும். இந்த பதக்கங்களை கங்கையில் வீசுவது ஒரு உணர்ச்சிகரமான நாடகம்.
இந்த வீரர்களின் வெற்றியில் எனது ரத்தமும், வியர்வையும் கலந்துள்ளது. நான் அவர்களை சபிக்க விரும்பவில்லை. மல்யுத்தம் மூலம் ஒலிம்பிக்கில் இதுவரை 7 பதக்கங்கள் கிடைத்துள்ளது. அதில், 5 எனது பதவிக் காலத்தில் வந்தவை. சில மாதங்களுக்கு முன்பு வரை என்னை மல்யுத்தத்தில் கடவுளாக பார்த்தார்கள்.
பிராமணர்கள் முதல் முஸ்லீம் வரை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து தரப்பு மக்களும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனவே, அவர்களின் ஆசிகள் பலிக்கும். என் மீதான குற்றசாட்டுகள் எதுவந்தாலும் அதை ஏற்றுகொள்வேன்” என தெரிவித்தார்.