IPS : சவால்கள் நிறைந்த ஐபிஎஸ் பணியில் சாதித்து காட்டிய பெண்கள்..!
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் எழுதும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பெரும்பாலானோர் ஆண்களாகவே உள்ளனர். இதில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர்கள் உயர்ந்த இடங்களை பிடித்து ஏராளமானோர் ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியாக என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது ஏதேனும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியிடம் கேட்டால், உங்களுக்கு ஒரு காரணம் தேவை என அவர்கள் சொல்வார்கள். உங்களின் நோக்கத்தை புரிந்து கொள்ள அவர்கள் முயற்சிப்பார்கள். நீங்கள் சரியான காரணங்களை உருவாக்கும் பட்சத்தில் உங்களுக்கு சரியான பதில்கள் கிடைக்கும். சவால்கள் நிறைந்த ஐபிஎஸ் பணியில் சாதித்து காட்டிய பெண் ஐபிஎஸ் அதிகாரிகளைத் தெரியுமா?
கிரண்பேடி
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியாகவும், சமூக செயற்பாட்டாளராகவும் உள்ள கிரண்பேடி, புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராகவும் பதவிவகித்தவர். இந்திய காவல் பணி வரலாற்றில் முதல் பெண்ணாக 1972-ஆம் ஆண்டு சேர்ந்த கிரண்பேடி 2007ஆம் ஆண்டு காவல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் ஜெனராலாக 35ஆண்டுகால ஐபிஎஸ் பணியை நிறைவு செய்தார். டெல்லி சிறைத்துறையின் ஐஜியாக நியமிக்கப்பட்டிருந்த காலத்தில் கிரண்பேடி, இந்தியாவின் மிக முக்கிய சிறையாக உள்ள திஹார் சிறையில் முக்கிய சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுதினார். அவரின் சீர்த்திருத்த முயற்சிகள் மூலம் உலக அளவில் புகழ் பெற்றார். 1994-ஆம் ஆண்டில் ராமேன் மகசேசா விருதை பெற்ற கிரண்பேடி, 2003-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் செயல்பாட்டுத் துறையில் ஆலோசகராக நியமிக்கப்பட்ட முதல் இந்திய பெண் என்ற பெருமை கிரண்பேடி பெற்றார். தற்போது இந்திய விஷன் என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் கிரண்பேடி, ஏராளமான புத்தகங்களை எழுதி உள்ளார்.
சஞ்சுதா ப்ரஷார்
2006 ஆம் ஆண்டு பிரிவின் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சுதா பராஷரின் பெயர் அசாமில் உள்ள போடா போராளிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறது. அசாமில் 6 பயங்கரவாதிகளை கொன்றதுடன், 15 மாதங்களில் 64க்கும் அதிகமான பிரிவினைவாதிகளை அவர் கைது செய்துள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்த முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சுதா ப்ரஷார், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் 85ஆவது இடத்தை பெற்றவர் ஆவார். சோனித்பூர் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள சஞ்சுதா, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில் ஏ.கே.47 ரக துப்பாக்கியை கையில் ஏந்திய ஜவான்ஸ் குழுவை வழிநடத்தும் சவாலை பெற்றுள்ளார். போபால்-உஜ்ஜைனி ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் வழக்கை விசாரிக்கும் பணியை அவர் மேற்கொண்டு வருகிறார்.
மெரின் ஜோசப்
மெரின் ஜோசப் தனது 25-ஆவது வயதில் கேரள கேடர் பிரிவில் தேர்வான இளைய ஐபிஎஸ் அதிகாரி ஆவார். சிறுவயதிலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்த மெரின் ஜோசப்பை விதி ஐபிஎஸ் அதிகாரியாக ஆக்கியது. 2012-ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்த பின்னர் யுபிஎஸ்சி தேர்வு எழுதிய மெரின் ஜோசப், 188ஆவது இடத்தை பிடித்தார். Y20 உச்சி மாநாட்டில் இந்திய பிரதிநிதிகளை வழிநடத்த சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர் மெரின் ஜோசப். அழகான பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் யார் என்ற பட்டியலில் தனது பெயரையும் ஒரு பத்திரிகை வெளியிட்டபோது அதனை கண்டித்த மெரின் ஜோசப், இது மாதிரியான விஷயங்கள் சமூகத்தில் உள்ள ஆணாதிக்க மனநிலையை வெளிக்கொணர்வதாக கூறினார். பாலியல் குற்றம் செய்துவிட்டு சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்துக்கு தப்பிச்சென்ற குற்றவாளியை பிடித்துள்ள மெரின் ஜோசப். நிறைய சமூக நலப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
சுபாஷினி சங்கரன்
சுதந்திர இந்தியாவில் முதல்வர் ஒருவரின் முழு பாதுகாப்பிற்கு பொறுப்பேற்ற முதல் பெண்மணியாக சுபாஷினி சங்கரன் ஐபிஎஸ் உள்ளார். யுபிஎஸ்சி மெயின் தேர்வில் 243ஆவது இடத்தை பிடித்த சுபாஷினி. கடந்த 2014 டிசம்பர் 23ஆம்தேதி சோனித்பூர் மாவட்டத்தில் பிரிவினைவாத இயக்கமான போடோலாந்தின் தேசிய ஜனநாயக முன்னணி குழுவில் போராளியாக செயல்பட்ட 30 பேரை கொன்றார். இச்சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரத்தில் நிலைமை தீவிரமடைவதை உணர்ந்த சுபாஷினி, சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புகள் இருந்ததால் உடனடியாக கொல்லப்பட்ட உடல்களை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நிலைமையை சீர்படுத்தினார். அசாமில் அவர் பொறுப்பில் இருந்தபோது காசிரங்கா தேசிய பூங்காவில் அருகில் செயல்பட்டு வந்த காண்டாமிருக வேட்டை குழுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டார்.
அபராஜித்தா ராய்
சிக்கிம் மாநிலத்தில் இருந்து வந்த முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியானஅபராஜிதாராய், யுபிஎஸ்சி தேர்வு எழுதிய 2011 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளிலும் தேர்ச்சி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது பயிற்சி காலத்திலேயே பல விருதுகளை வென்றுள்ளார். சிக்கிம் மாநிலத்தில் நன்கு படித்த குடும்பத்தில் பிறந்த அபராஜிதா, தனது எட்டு வயதில் தந்தையை இழந்தார். வனத்துறை அதிகாரியாக இருந்த தந்தை உயிரிழந்த நிலையில் தனது தாயின் வளர்ப்பில் அபராஜிதா வளர்ந்தார். மக்களிடம் அரசு ஊழியர்களுக்கு இருக்கும் உணர்ச்சியற்ற அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்ற முனைப்பே தான் யுபிஎஸ்சி தேர்வு எழுத காரணமாக இருந்ததாக கூறும் அபராஜிதா. சிறந்த களவீரர்களுக்கு வழங்கப்படும் உமேஷ் சந்திரா டிராபி, மேற்கு வங்க அரசு டிராபி ஆகிய விருதுகளை வென்றுள்ளார். என்னை சந்திக்க வரும் மக்கள் யாரையும் அதிகாரிகள் வேதனைப்படுத்தக்கூடாது என்பதே தனது முக்கிய நோக்கங்களின் ஒன்று என அபராஜிதா கூறுகிறார்