(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: தலைக்கேறிய கோபம்! விமான நிலைய ஊழியரை கடித்து வைத்த பெண் பயணி!
லக்னோவில் பெண் பயணி ஒருவர் விமான நிலைய ஊழியரை கையிலே கடித்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைந்து செல்வதற்கு விமான பயணமே முதன்மையாக உள்ளது. கட்டணம் அதிகம் என்றாலும், நாட்டில் தினசரி விமானத்தில் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். சமீபகாலமாக விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு இடையே சண்டை, பயணிகளுக்கும் விமான குழுவினருக்கும் இடையே மோதல் என பல சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
ஆவேசப்பட்ட பெண் பயணி:
இந்த சூழலில், லக்னோ விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று சக பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவில் பிறந்த பெண் ஒருவர் மும்பையில் வசித்து வருகிறார். இவரது சகோதரி லக்னோவில் வசித்து வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக அவர் மும்பையில் இருந்து லக்னோ வந்துள்ளார். லக்னோவில் தனது சகோதரியை பார்த்த அவர் மும்பைக்கு மீண்டும் விமானத்தில் திரும்ப திட்டமிட்டுள்ளார். இதற்காக விமானத்தில் டிக்கெட்டும் பதிவு செய்துள்ளார்.
லக்னோவில் இருந்து நேற்று மாலை 5.25 மணியளவில் மும்பை செல்ல தயாராக இருந்தது. விமானம் புறப்படுவதற்கு முன்கூட்டியே பயணிகளை விமானத்தில் ஏற்றிக் கொள்வது வழக்கம். அதுபோல, உள்ளே சென்ற இந்த பெண் சக பயணி ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இவரை சமாதானப்படுத்த மற்ற பயணிகள் முயன்றனர். ஆனாலும், அவர் அமைதியாகவில்லை.
விமான நிலைய ஊழியருக்கு கடி:
இதையடுத்து, விமான குழுவினர் அந்த பெண் பயணியிடம் அமைதியாக அமரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால், அந்த பெண் மேலும் கோபமாக ஆவேசமாக சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விமானம் சக பயணிகளின் பாதுகாப்பு கருதி அவரை விமானத்தில் இருந்து கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். இதற்காக, விமான நிலையத்தில் இருந்த பணியாளர்கள் சிலர் வரவழைக்கப்பட்டனர்.
ஆனால், அவர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண் பயணி, அவரை கீழே அழைத்துச் செல்ல வந்த விமான நிலைய ஆண் ஊழியர் ஒருவரின் மணிக்கட்டை கடித்தார். இதைக்கண்ட சக பயணிகள் மற்றும் விமான குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் அந்த பெண் பயணி கீழே இறக்கப்பட்டார். அவர் மீது சரோஜினி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் மீது 324 பிரிவு மற்றும் 504 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணம் செய்ய வந்த பெண் பயணி, விமான நிலைய ஊழியரை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை லக்னோ விமான நிலையத்தில் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பி! சைவ பிரியரான அண்ணன் தற்கொலை! - சென்னையில் சோக சம்பவம்!
மேலும் படிக்க: ப்ரொடியூசருக்கு பெண்கள் சப்ளை, கொலை செய்த புரோக்கர், மேல்மலையனூரில் சாமியார் வேடம் - நடந்தது என்ன ?