திடீரென பரவிய தீ! 4வது மாடியில் இருந்து கீழே குதித்த பாட்டி, பேத்தி - அடுத்து நடந்த பரிதாபம்!
டெல்லியில் தீப்பிடித்த வீட்டில் இருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
டெல்லியில் அமைந்துள்ள துவாரகா செக்டர் 10. இங்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து வருபவர் ஜசுரி தேவி. அவருக்கு வயது 83. அவரது பேத்தி பூஜா பண்ட். அவருக்கு வயது 30. பூஜாவின் கணவர் யோகேஷ்.
வீடு முழுவதும் பரவிய தீ:
பூஜாவும், யோகேஷ் ஜப்பானில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள பூஜா வீட்டிற்கு வந்துள்ளனர். யோகேஷ் நொய்டாவில் உள்ள தனது பெற்றோர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று வீட்டில் பூஜா, அவரது பாட்டி ஜசுரி தேவி மற்றும் மகேஷ் பண்ட் வீட்டில் இருந்துள்ளனர். மகேஷ் பண்ட் மருந்துகள் வாங்குவதற்காக கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, திடீரென வீட்டில் தீப்பிடித்துள்ளது. இதைக்கண்டு பூஜாவும், அவரது பாட்டி ஜசுரி தேவியும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நான்காவது மாடியில் இருந்து...:
வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இருவரும் தவித்துள்ளனர். அப்போது, வீடு முழுவதும் தீ மளமளவென பரவியது. இதனால், தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வீட்டின் பால்கனிக்குச் சென்றுள்ளனர். நான்காவது தளத்தில் இவர்களது குடியிருப்பு இருந்ததால் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.
அப்போது, தீப்பிடித்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அவர்களை காப்பாற்றுவதற்காக கீழே பெட்ஷீட் உள்ளிட்ட துணிகளை விரித்துப் பிடித்துள்ளனர். இதனால், ஜசுரி தேவியும், அவரது பேத்தி பூஜாவும் நான்காவது மாடியில் இருந்து தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள கீழே குதித்தனர்.
பாட்டி மரணம், பேத்தி படுகாயம்:
ஆனால், ஜசுரி தேவி கீழே குதித்தபோது கீழே பெட்ஷீட்டை பிடித்தவர்கள் சரியாக பிடிக்காததால் அவர் தரையில் மீது பலத்த காயத்திற்கு ஆளானார். அவரை அடுத்து கீழே குதித்த பூஜா இரண்டாவது மற்றும் முதல் தளத்தில் மோதி கீழே குதித்தார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதுடன் கீழே குதித்ததிலும் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், ஜசுரி தேவி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்துள்ள பூஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெற்று வருகிறார். வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்து, உயிரை காப்பாற்றிக் கொள்ள கீழே குதித்த பாட்டி மற்றும் பேத்தியில் பாட்டி உயிரிழந்ததும், பேத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதும் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: சிமெண்ட் மூட்டை கேட்க சென்ற வாலிபரை தாக்கிய ஒப்பந்ததாரர் - விழுப்புரத்தில் பரபரப்பு
மேலும் படிக்க: Crime: தூக்கில் சடலமாக தொடங்கிய இளம்பெண்! சன்ரைசர்ஸ் ஹைதரபாத் வீரருக்கு தொடர்பா?