விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சி! அடுத்த 40 வருஷம் பாஜகதான்.. மேடையிலேயே மெகா பிளானை சொன்ன அமித்ஷா!
அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும் என்றும், இந்தியா உலகுக்கே தலைமையாக மாறும் என்றும் தீர்மானத்தை முன்மொழிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும் என ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி அமைத்திருந்தாலும், இந்த மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது கானல் நீராக உள்ளது.
அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும் என்றும், இந்தியா உலகுக்கே தலைமையாக மாறும் என்றும் தீர்மானத்தை முன்மொழிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்ததாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் கூறினார்.
ராஜஸ்தானின் உதய்பூர் மற்றும் மகாராஷ்டிராவின் அமராவதியில் நடந்த கொலைகள் குறித்து பேசிய அமித் ஷா, குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக செயல்படுவது ஒழிக்கப்பட்டவுடன் வகுப்புவாதம் முடிவுக்கு வரும் என்றார்.
பொதுத் தேர்தல்கள், இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற வெற்றி, கட்சியின் வளர்ச்சி மற்றும் சிறப்பாக செயல்பட்டதற்கான மக்கள் அளித்த ஒப்புதலை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும், குடும்ப ஆட்சி, சாதிவெறி மற்றும் குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அமித் ஷா கூறினார்.
தெலுங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் என்றும், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக ஆட்சிக்கு வரும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
2002 குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்பி எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி, மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடியை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விடுவித்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளபடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அமித் ஷா, "சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது" என்று பாராட்டினார்.
காங்கிரஸ் ஒரு குடும்பத்தின் கட்சியாக மாறிவிட்டது, அதன் உறுப்பினர்கள் பலர் கட்சியில் இருந்து கொண்டு ஜனநாயகத்திற்காக போராடுகிறார்கள் என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் காந்தி குடும்பத்தினர் உள் கட்சி தேர்தலை நடத்த அனுமதிக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையற்றவை, அரசாங்கம் செய்யும் அனைத்து நல்ல செயல்களையும் எதிர்க்கின்றன என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்