கொரோனாவின் தோற்றம்... முக்கிய தகவலை பகிர்ந்து அதிர்ச்சி அளித்த உலக சுகாதார அமைப்பு..!
கொரோனா தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என அடுத்தடுத்து உருமாறிய வைரசுகளால் பெரும் உயிர்பலிகள் நிகழ்ந்தன. இறுதியில், விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகளால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஆனால், கொரோனா எப்படி உருவானது என்பது தொடர் மர்மமாகவே இருந்து வருகிறது. சீனாவில் வூஹான் ஆய்வகம் ஒன்றில் இருந்து பரவியதாகவும், நோய் பாதிக்கப்பட்ட விலங்கில் இருந்து பரவியதாகவும் கூறப்பட்டு வந்தது.
பைடன் பிறப்பித்த உத்தரவு:
கடந்த 2021ஆம் ஆண்டு, மே மாதம் அமெரிக்க அதிபர் பைடன், உளவுத்துறை அமைப்புகளை வைரஸின் தோற்றம் குறித்து ஆராயுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்களால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.
இப்படி, தொடர் மர்மம் நீடித்து வரும் சூழலில், ஆய்வகத்தில் இருந்து வைரஸ் தெரியாமல் பரவி இருக்கலாம் என அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவித்ததாக புகழ்பெற்ற தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டது. ஆனால், இதை சீனா தொடர்ந்து மறுத்து வந்தது. எனவே, இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் உலக சுகாதார அமைப்புக்கு ஏற்பட்டது.
கொரோனாவின் தோற்றம்:
இந்நிலையில், கொரோனா தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனாவின் தோற்றத்தைக் கண்டறிவது ஒரு தார்மீக கட்டாயமாகும். மேலும், அனைத்து கருதுகோள்களும் ஆராயப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பு விளக்கம்:
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "COVID19 இன் தோற்றத்தைப் புரிந்துகொள்வதற்கு அனைத்து கருதுகோள்களை ஆராய்வது எஞ்சியிருக்கிறது. இறந்த மில்லியன் கணக்கான மக்கள் மற்றும் நீண்ட கொரோனா அறிகுறிகளுடன் வாழ்பவர்களின் நலனுக்காக எதிர்கால வைரஸ் பரவலை தடுப்பது தார்மீகக் கட்டாயம்" என பதிவிட்டுள்ளார்.
கொரோனாவை உலக சுகாதார அமைப்பு பெருந்தொற்றாக அறிவித்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு இந்த கருத்தை தெரிவித்துள்ளது. உலகில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு வுஹானில் பதிவாகியது. கடந்த 2021 ஆம் ஆண்டு, உலக சுதாதார அமைப்பின் குழு, அங்கு சென்று பார்வையிட்டது.
பல வாரங்கள் செலவழித்து, கொரோனா வைரஸ் வெளவால்களிலிருந்து மனிதர்களுக்கு மற்றொரு விலங்கு மூலம் பரவியிருக்கலாம் என்று கூட்டறிக்கையில் தெரிவித்தது. ஆனால், இது தொடர்பாக அடுத்தக்கட்ட ஆராய்ச்சி தேவை என தெரிவித்தது. ஆனால், சீனா இனி எந்த பயணமும் மேற்கொள்ள வேண்டாம் என கூறி உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையை நிராகரித்தது.