மியான்மரில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? - மத்திய அரசின் அதிரடி ப்ளான்!
"இந்தியர்கள் குறித்து நமது தூதர் வினய் குமாரிடம் பேசினோம். முன்னேற்றங்கள் குறித்து தூதர் என்னிடம் விவரித்தார். மேலும் இந்தியர்களை விரைவில் விடுவிக்க அனைத்து முயற்சிகளும் நடந்து வருவதாகத் தெரிவித்தார்"
மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உள்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (21-9-2022) கடிதம் எழுதியிருந்தார்.
Spoke to our Ambassador Vinay Kumar regarding Indians held in Myanmar. Ambassador apprised me on the developments and informed that all efforts are on to release the Indians as soon as possible.
— V. Muraleedharan (@MOS_MEA) September 21, 2022
Mission is closely following up the matter. https://t.co/l8PiD3SXKH
'மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இப்பிரச்னையை இந்தியப் பிரதமரின் உடனடி கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன் என்றும் அவர்கள் ஆரம்பத்தில் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து நாட்டிற்குச் சென்றதாகத் தெரிய வருகிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாதுகாப்புச் சவால்கள் மற்றும் பிற சட்ட மற்றும் தளவாடச் சிக்கல்கள் இருந்தபோதிலும், நாங்கள் இதுவரை 30க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டுள்ளோம் என்றும் மேலும் குற்றவாளிகளிடம் உள்ள மற்ற இந்தியர்களை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றும் மியான்மரில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் முரளிதரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மியான்மரில் உள்ள இந்தியர்கள் குறித்து நமது தூதர் வினய் குமாரிடம் பேசினோம். முன்னேற்றங்கள் குறித்து தூதர் என்னிடம் விவரித்தார். மேலும் இந்தியர்களை விரைவில் விடுவிக்க அனைத்து முயற்சிகளும் நடந்து வருவதாகத் தெரிவித்தார்.
தூதரகம் இந்த விஷயத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், "ஆன்லைனில் சட்ட விரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரிய வருகிறது. அவர்கள் அத்தகைய சட்ட விரோத வேலைகளை செய்ய மறுத்ததால் வேலையளிப்போரால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன.
அவர்களில் 17 தமிழர்களுடன் மாநில அரசு தொடர்பில் உள்ளனர். அவர்களை விரைவாக மீட்பதற்கு அரசின் உதவியை நாடுகின்றனர். மியான்மரில் சட்டவிரோதமாக சிறை பிடிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக அவர்களை மீட்க வேண்டும். மீட்டு, பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப அழைத்துவரவும், மியான்மரில் உள்ள தூதரகத்திற்கு இப்பிரச்சினை குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கவேண்டும். இது தொடர்பாக பிரதமரின் அவசர தலையீட்டைத் கோருகிறேன்''.
இவ்வாறு தனது கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, ’தாய்லாந்துக்கு வேலை தேடிச் சென்ற இந்திய இளைஞர்களை, மியான்மர் நாட்டின் மியாவாடி நகருக்கு கடத்திச் சென்று, கட்டாயப்படுத்தி சட்ட விரோதமான வேலைகளில் ஈடுபடுத்துவது பற்றிய அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த இளைஞர்களை உடனே இந்திய அரசு மீட்க வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.