122 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியாவில் அதிக வெப்பநிலை பதிவு - இந்திய வானிலை ஆய்வு மையம்!
ஏப்ரல் 3 தேதி முதல் இந்தியாவில் கடுமையாக வெப்பநிலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் வெளியில் செல்லும் போது உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 33.10 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகளவு வெப்பத்தை நாம் சமீபகாலங்களாகப் பார்த்து வருகிறோம். காலை 9 மணிக்கே ஆரம்பிக்கும் வெப்பத்தின் தாக்கம் மாலை 6 வரை நீடிக்கிறது என்றே கூறலாம். இதன் காரணமாக மதிய வேளைகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெப்பம் வாட்டி வதக்கும் நிலையில் தான் இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிக்கைக் குறித்து வானிலை முன்னறிவிப்பு மையத்தின் விஞ்ஞானி ராஜேந்திர ஜெனமணி கூறுகையில், அதிக வெப்ப அலைகள், பலத்த சூறாவளி அல்லது அதிக மழையின் காரணமாக இந்தியாவில் காலநிலை மாற்றம் பாதிக்கப்படுவதோடு வானிலையின் தீவிரத்தையும் பாதிப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும் கடந்த 1901 ஆம் முதல் இன்று வரை அதாவது 122 ஆண்டுகளில் வரலாற்றில் மிக வெப்பமான மார்ச் மாதத்தை இந்தியா அனுபவித்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மார்ச் மாதத்தில் மழைப்பொழிவு மிகவும் குறைவாக இருந்ததற்குக் காரணம் தான், சென்ற மாதம் அதாவது மார்ச் மாதத்தில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை 33.10 டிகிரி செல்சியஸாகப் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கிந்தியாவில் வழக்கமாகப் பெய்யும் மழை இல்லாமல் போனதும், தென்னிந்தியப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தப்பகுதி தோன்றாமல் இருந்ததும் வெப்பநிலை அதிகரித்ததற்குக் காரணம் எனக்கூறப்படுகிறது.
இதோடு இந்திய வானிலை ஆய்வுமையத்தின் கூற்றுப்படி, ஜம்மு பிரிவு, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா-டெல்லி, மேற்கு ராஜஸ்தான் போன்ற வட இந்தியாவின் பல பகுதிகளில் இயல்பான வெப்பநிலையை விட 6-8 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. மேற்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசம், சௌராஷ்டிரா-கட்ச், விதர்பா, மற்றும் கங்கை மேற்கு வங்கம் ஆகியவற்றில் சில பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், மேற்கு ராஜஸ்தானின் பெரும்பாலானப் பகுதிகளிலும், இமாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளிலும், ஹரியானா மற்றும் டெல்லியின் சில பகுதிகளிலும் வெப்ப அலை முதல் கடுமையான வெப்ப அலை நிலைகள் காணப்பட்டதாகவும்,. கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளிலும், ஜம்மு மற்றும் உத்தரபிரதேசத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் வெப்ப அலை நிலைகள் காணப்பட்டன எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதோடு இன்று முதல் அதாவது ஏப்ரல் 3 தேதி முதல் இந்தியாவில் கடுமையாக வெப்பநிலை நிலவும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அதற்கேற்றால் போல் மக்கள் வெளியில் செல்லும் போது உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. முடிந்தவரை மதிய வேளைகளில் அதாவது வெப்பம் அதிகம் தாக்கும் நேரங்களில் பயணத்தைத் தவிர்க்கலாம். முடியாத பட்சத்தில் உங்களுக்குத் தேவையான அளவு தண்ணீர் போன்றவற்றை உடன் எடுத்துச் செல்வதற்கு மறந்துவிடாதீர்கள்.